மத்திய சிறைகள் அனைத்தும் நவீனமயமாக்கப்படும்; நாட்டிலேயே சிறை கைதிகளுக்கு தமிழகத்தில்தான் ஊதியம் அதிகம்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

நெல்லை: தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மாநிலத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகளையும் பார்வையிட்டு கைதிகள் மற்றும் சிறைக்காவலர்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறேன்.

சிறையில் கைதிகளுக்கு சரியான நேரத்தில் சத்துள்ள உணவுகள் வழங்கப்படுகிறதா, பாதுகாப்பு வசதிகள் எப்படி உள்ளது? எனவும் ஆய்வு நடத்தினேன். சிறைக்கைதிகள் தயாரிக்கும் பேன்டேஜ், விவசாய பொருட்கள், பால் உற்பத்தி பொருட்கள் உள்ளிட்டவைகள் சிறை வளாகத்தில் அங்காடியில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அவற்றில் கிடைக்கும் லாபம் சிறை கைதிகளுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே சிறைக்கைதிகளுக்கு அதிக ஊதியம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.

சிவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளுக்கான தேர்வு உச்சநீதிமன்றம் வழங்கிய ஆலோசனையின்படி விரைவில் நடத்தப்படும். தமிழக மத்திய சிறைகள் அனைத்தும் நவீனமயமாக்கப்படும். இடநெருக்கடி உள்ள சிறைகளுக்கு புதிய கட்டிடம் அல்லது மாற்று இடம் வழங்கப்படும். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுவிப்பது தொடர்பாக நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கலைஞர் அடைக்கப்பட்ட இடத்தில் நினைவு சின்னம் அமைக்க முதல்வரிடம் அனுமதி கோரப்படும். தமிழக சிறைத்துறைகளில் கைதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 2ம் நிலை காவலர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: