ஐடி கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.100 கோடி மோசடி செய்த வாலிபர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதி

நாகர்கோவில்: ஐ.டி.கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய குமரி வாலிபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ரூ. 100 ேகாடி மோசடி செய்தது தெரியவந்தது. அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய நிலையில் உடல்நிலை சரியில்லை என கூறியதால் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே திட்டுவிளை குருசடி பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ் ஷாரோன் (30). நேற்று மதியம் மும்பை சைபர் க்ரைம் போலீசார் மற்றும் பூதப்பாண்டி தனிப்படையினர் ஆகியோர் பிரின்ஸ் ஷாரோன் வீட்டில் சோதனை செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:

பிரின்ஸ் ஷாரோன் மற்றும் அவரது கூட்டாளிகள் சுமார் 16 பேர் சேர்ந்து மும்பை, மலேசியா, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் ஐ.டி. கம்பெனி நடத்தி வருவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்து உள்ளனர். இதில் பணியாற்றிட பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்தனர்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து அந்தந்த பகுதிகளில் இளைஞர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து சிலரை தேர்வு செய்திருப்பதாக அறிவித்து அவர்களிடம் இருந்து ஆதார் கார்டு, பான்கார்டு நம்பர், வங்கி பாஸ் புத்தகத்தின் முதல் பக்கம் ஆகியவற்றை வாங்கியுள்ளனர். மேலும் அவர்களை தேர்வு செய்திருப்பதாக கூறி பணம் வசூல் செய்ததுடன், மேலும் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் இருந்து அவர்களுக்கே தெரியாமல் பணத்தை எடுத்துள்ளனர். அந்த வகையில் சுமார் ரூ. 100 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர்.

இந்தியாவின் பல பகுதிகள் மற்றும் மலேசியாவிலும் ஆன் லைன் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் நாகர்கோவில் கோர்ட்டில் போலீசார் அவரை ஆஜர்படுத்தினர். அப்போது அவர் உடல்நிலை சரியில்லை என்று கூறினார். இதையடுத்து அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீசார் கூறினர்.

Related Stories: