எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4800 கோடி டெண்டர் ஊழல் வழக்கு உலக வங்கியின் விதிகளை மீறி டெண்டரில் முறைகேடு செய்துள்ளார்: விரைவில் உண்மை வெளிச்சத்துக்கு வரும்; ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.400 கோடி டெண்டர் ஊழல் வழக்கில், விரைவில் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்றும், உலக வங்கியின் விதிகளை மீறி டெண்டரில் முறைகேடு செய்துள்ளார் என்றும் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், வழக்குத் தொடர்ந்த திமுக சட்டத்துறை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் ரூ.4800 கோடி முறைகேடு நடைபெற்றது குறித்து உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடர்ந்தேன். நீதிமன்றத்தின் முன் நாங்கள் வைத்த வாதங்களானது, ‘‘ நாங்கள் கேட்டதெல்லாம் உரிய விசாரணை தேவை என்று தான் கேட்டோம்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘இந்த வழக்கு சிபிஐக்கு விசாரணைக்கு பரிந்துரை செய்து அனுப்புகிறோம்’ என்று தீர்ப்பளித்தது. அதற்கு தடை கோரி எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்துக்கு சென்று, ‘சிபிஐ விசாரணை கூடாது’ என்று கேட்டிருந்தார். இன்றைக்கு அந்த வழக்கு வந்த நேரத்தில் திமுக சார்பில் நாங்கள் நீதிமன்றத்தில் வைத்த வாதம் என்பது, ‘‘எங்களுக்கு நடைபெற்ற இந்த முறைகேடுகள், ஊழல்கள் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’’ என்பது தான். இதுதான் எங்கள் நோக்கமே தவிர விசாரிப்பவர்கள் யார் என்பதை பற்றி எங்களுக்கு கவலையில்லை என்று தான் எனது வழக்கறிஞர் இந்த வாதத்தை வைத்தார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்க சிபிஐ தேவையில்லை’’ என்று கூறியுள்ளனர்.

 

திமுக தொடரும் வழக்குகள் எப்போதுமே உண்மையானதாகவும், நியாயமானதாகவும் இருக்கும். திமுக தொடர்ந்த வழக்கிலிருந்து யாரும் தப்பியதாக வரலாறு இல்லை. ஏற்கனவே ஜெயலலிதா வழக்கில் கூட நாங்கள் வாதாடி போராடி தான் வெற்றி கண்டிருக்கிறோம். அதேபோன்று இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர்.  சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு வரும், அப்போது எங்கள் வாதங்களை வைப்போம். நல்ல தீர்ப்பு வரும். அப்போது, விரைவில் உள்ளே போக வேண்டியவர்கள் போவார்கள், அனுபவிக்க வேண்டியதை அனுபவிப்பார்கள. தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக பார்க்க போகிறீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: