ரூ.30 கோடி அரசு நிலம் தனியாருக்கு விற்பனை விஜிபி ராஜேஷ், டிஆர்ஓ உள்பட 6 அதிகாரிகள் அதிரடி கைது: ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மெகா மோசடி அம்பலத்துக்கு வந்தது

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் சுமார் ரூ. 30 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை முறைகேடாக விற்பனை செய்ய உடந்தையாக இருந்த இணைபதிவாளர், டிஆர்ஓ உள்பட 5 அதிகாரிகளை, சிபிசிஐடி போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, வடகால் மற்றும் பால்நல்லூர் கிராமங்களில் விஜிபி நிறுவனத்தால் வினோத் நகர் என்ற பெயரில் வீட்டுமனை பிரிவுகள் அமைக்கப்பட்டது. விஜிபி நிறுவனத்தின் சார்பாக அதன் பங்குதாரர் ராஜதாஸ் என்பவர் 1991ம் ஆண்டு இந்த மனைப் பிரிவுகளின் பொது உபயோகத்திற்காக (ஓஎஸ்ஆர்)16.64 ஏக்கர் நிலத்தை ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு முறையாக பதிவு செய்து கொடுத்துள்ளார். ஆனால், இந்த நிலத்தை விஜிபி அமலதாஸ் ராஜேஷ் தனது நிலம் என்று கூறி தனியாருக்கு விற்பனை செய்துள்ளார்.  

இதுகுறித்து சிபிசிஐடி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் அருண்பிரசாத், திரிபுரசுந்தரி ஆகியோர் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில், ஓஎஸ்ஆர் நிலங்களை ஆவணத்தில் திருத்தி தனியார் நிலமாக மாற்றி, விற்பனை செய்ய உடந்தையாக இருந்ததாக, செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரை சேர்ந்த காஞ்சிபுரம் சார்பதிவாளர் ராஜதுரை (40), சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த இந்துசமய அறநிலையத்துறை டிஆர்ஓ ராஜேந்திரன் (54), ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த இளநிலை உதவியாளர் பெனடின்(54), காஞ்சிபுரம் புரிசை கிராமத்தைச் சேர்ந்த காஞ்சிபுரம் நிலஎடுப்பு தாசில்தார் எழில்வளவன் (50), ஸ்ரீபெரும்புதூர் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் பார்த்தசாரதி (33) ஆகியோர் மீது 11 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடந்தது. விசாரணைக்கு பிறகு டிஆர்ஓ உள்பட 5 பேரும் கைது செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். ஏற்கனவே ஆயக்கொளத்தூர் கிராமத்தில் இதே போன்று சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை மோசடி செய்த வழக்கில் அமலதாஸ் ராஜேஷ் கைது செய்யப்பட்டதும், அதற்கு உதவியாக இருந்த இரண்டு சார் பதிவாளர்களான சுரேஷ் , ரவி என இருவரும் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: