காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி விவகாரம் அரசின் நிலை என்ன?

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக நிதி நெருக்கடி விவகாரத்தில் தமிழக அரசின் நிலை என்ன என்பது குறித்து தெரிவிக்குமாறு ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. மதுரை மாவட்டம், வடபழஞ்சி மணப்பட்டியைச் சேர்ந்த சேகர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 1991ல் தினக்கூலியாக தாவரவியல் தோட்டப்பணியாளராக பணியில் சேர்ந்தேன். 2010ல் பணிநீக்கம் செய்யப்பட்டேன். இதை எதிர்த்த வழக்கில், என்னை பணியில் சேர்க்கவும், இழப்பீடாக ரூ.10 ஆயிரம் வழங்கவும் தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து 2011ல் மீண்டும் தினக்கூலியாக பணியில் சேர்ந்தேன். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக பணி வரன்முறை செய்யாமல் தினக்கூலியாகவே பணியாற்றினேன். அதே நேரம் என்னுடன் பணியில் சேர்ந்த பலர் நிரந்தரம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த 10ம் தேதி என்னை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை ரத்து செய்ய வேண்டும்.’’ என்று கூறியிருந்தார். இதேபோல் மேலும் சிலர் மனு செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. பல்கலைக்கழகம் தரப்பில், ‘‘பல்கலை நிதி நெருக்கடியில் உள்ளது. அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக இருந்தவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்’’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘‘பல்கலை நிதி நெருக்கடியை போக்கிடும் விவகாரத்தில், அரசின் நிலையை தெரிவிக்க வேண்டும்’’ என கூறி, விசாரணையை தள்ளி வைத்தார்.

Related Stories: