ராணிப்பேட்டையில் தொடர் கனமழை; குமணந்தாங்கல் ஏரி மீண்டும் நிரம்புகிறது: விவசாயிகள் மகிழ்ச்சி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக குமணந்தாங்கல் ஏரி நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ராணிப்பேட்டை அடுத்த பொன்னை ஆற்று அணைக்கட்டில் வெள்ளம் ஏற்படும்போது அங்கிருந்து இரண்டு பிரதான கால்வாய்கள் வழியாக பெரிய காஞ்சிபுரம், சோளிங்கர், ரெண்டாடி, கொடைக்கல் உள்பட பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து இருப்பது வழக்கம்.

இதன் மற்றொரு  ஆற்றுக்கால்வாய் வழியாக வரும் பொன்னை ஆற்றுநீர் ராணிப்பேட்டை அருகே உள்ள குமணந்தாங்கல் ஏரி நிரம்பி வழிந்தால் ஏகாம்பரநல்லூர், கத்தாரிக்குப்பம், நெல்லிக்குப்பம் லாலாப்பேட்டை உள்பட பல்வேறு கிராமங்களின் சிறு ஏரிகள் நிரம்பும். அதன்பின்னர் எடப்பாளையம், வானாபாடி, செட்டித்தாங்கல், மாந்தாங்கல், அனந்தலை, செங்காடு, வள்ளுவம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளும் அடுத்தடுத்து நிரம்பும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த தொடர் கனமழையின்போது மேற்கண்ட அனைத்து ஏரிகளும் நிரம்பின.

இந்நிலையில் அண்மையில் பெய்துவரும் கனமழையால் தற்போது மீண்டும் பொன்னை அணைக்கட்டிலிருந்து மழைவெள்ளம் பெருக்கெடுத்து குமணந்தாங்கல் ஏரி நிரம்பி வருகிறது. இதனால் அடுத்த சில நாட்களில் ஏகாம்பரநல்லூர், கத்தாரிக்குப்பம்,

நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை உள்பட பல்வேறு கிராம ஏரிகளும் நிரம்பும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த நவம்பர் மாதத்திற்கு பிறகு இந்த ஆண்டு மே மாதமும், அதன் தொடர்ச்சியாக தற்போதும் ஏரிகள் நிரம்பி வருவதால் விவசாய பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Stories: