கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு சாகச பயணம் புறப்பட்ட வாலிபர், லாரி மோதி பலி: உறவினர்கள் ஹரியானா விரைந்தனர்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்சாரமூடு புல்லம்பாறை பகுதியை சேர்ந்தவர் அலியார். இவரது மகன் அனஸ் ஹஜாஸ் (31), சிறு வயது முதலே ஸ்கேட்டிங் போர்டு மீது அலாதி பிரியம் கொண்டவர். பல போட்டிகளில் வென்றுள்ளார். இந்நிலையில் ஸ்கேட்டிங் போர்டில் யாருமே இதுவரை செய்யாத ஒரு சாகச பயணத்தை நடத்தும் ஆவல் அனஸ் ஹஜாஸ்க்கு ஏற்பட்டது. அதன்படி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் போர்டில் செல்ல முடிவெடுத்தார். இதற்கு அவரது நண்பர்கள், உறவினர்கள் உள்பட அனைவரும் பெரும் ஆதரவு அளித்தனர்.

இதையடுத்து கடந்த மே 29ம் தேதி அனஸ் ஹஜாஸ் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு ஸ்கேட்டிங் போர்டில் புறப்பட்டார். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல மாநிலங்களை கடந்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஹரியானா மாநிலத்தை அடைந்தார். அம்பலா என்ற இடத்தில் எடுத்த தனது வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதில், ‘நண்பர்களே, எனது சாகச பயணத்தின் 64வது நாளான இன்று ஹரியானா மாநிலத்தை அடைந்துள்ளேன். இன்னும் 10 அல்லது 15 நாட்களில் காஷ்மீரை அடைந்து விடுவேன். அனைவரும் எனக்காக பிரார்த்திக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அதுதான் அனசின் கடைசி வீடியோவாக இருக்கும் என்று யாரும் அப்போது அறிந்திருக்கவில்லை. நேற்று ஹரியானா மாநிலம் பஞ்சகுலாவில் சென்றபோது லாரி மோதி அனஸ் பரிதாபமாக இறந்தார். இதை கேட்டதும் பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அனஸ், உடல், அங்குள்ள ஒரு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உடலை பெறுவதற்காக உறவினர்கள் விரைந்துள்ளனர்.

Related Stories: