சமூக வலைதளங்களில் தேவையில்லாத வீடியோ போட்டோக்களை மாணவிகள் கவனமாக கையாள வேண்டும்-அமைச்சர் கீதாஜீவன் அறிவுறுத்தல்

தூத்துக்குடி : சமூக வலைத்தளங்களில் தேவையில்லாத வீடியோ, போட்டோக்களை மாணவிகள் கவனத்துடன் கையாள வேண்டுமென அமைச்சர் கீதாஜீவன் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மனித கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி, தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் முன்னிலை வகித்தார்.

மனித உறுப்பு திருட்டு, பாலியல் தொழில் உள்ளிட்டவைகளில் ஈடுபடுத்த உலகளவில் மனித கடத்தல் நிகழ்த்தப்படுவது குறித்து திரை மூலம் காட்சிப்படுத்தப்பட்டு, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு பேசியதாவது: கல்லூரியில் படிக்கும் காலம் மிகவும் மகிழ்ச்சியான தருணம். படிக்கும் பொழுது கடமை, கட்டுப்பாடு, கண்ணியத்துடன் மாணவிகள் நடந்து கொள்ள வேண்டும். கல்லூரி படிப்பு என்றாலே அறிவாற்றல் வளர கூடிய ஒரு தளம், கல்லூரி முடித்த பிறகு அடுத்து என்ன படிக்க வேண்டுமென மாணவிகள் சிந்திக்க வேண்டும்.

மாணவிகள் மொபைல் உபயோகிக்கும் போது கவனமாக  இருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் தேவையில்லாத வீடியோ, போட்டோக்கள் வரும்போது கவனத்துடன் கையாள வேண்டும். இளம் மாணவிகளை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி வருகின்றனர். மாணவிகள் அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும். குடும்பத்தில் சகோதரர்கள் சரியான பாதையில் செல்கின்றனரா? என அறிந்து தீய வழியில் போகாதவாறு நாம் பார்த்து கொள்ள கடமைப்பட்டு இருக்கிறோம்.

மாவட்ட நிர்வாகம், காவல் துறை, சமூக நலத்துறை சர்ப்பில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்து வருகிறோம். சிறுமிகள், பெண்கள் பாலியல் ரீதியாக கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். அவ்வாறு பாதிக்கப்படுவோர், 1098 என்ற எண்ணை அழைத்து உதவிகளை கோரலாம். 1091 என்ற எண்ணில் காவல் துறையை உதவிக்கு அழைக்கலாம்.

மேலும் வீதிகளில் முதியோருக்கு உதவி தேவைப்பட்டால் 14567 என்ற எண்ணை அழைத்து மாணவிகள் உதவி செய்ய வேண்டும். காதல் என்ற வார்த்தையில் அகப்படாமல் மாணவிகள் கவனமுடன் செயல்பட வேண்டும், என்றார். இதில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ரதிதேவி, தூய மரியன்னை கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், இளஞ்சிறார் நீதிக்குழும உறுப்பினர் ரூபன் கிஷோர், வேம்பார் சைல்டு லைன் திட்ட இயக்குநர் மன்னர் மன்னன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: