இன்று ஆடிப்பெருக்கு விழா பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

புதுச்சேரி : புதுவையில் இன்று ஆடி பெருக்கு விழா கொண்டாடப்படுவதால் நேற்று பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். ஆடி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிவன், பார்வதி வீற்றிருக்கும் சிவாலயங்கள் மற்றும் அம்மன் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபடுவர். ஆடி 18ம் தேதி ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆடி பெருக்கு அன்று, தாலி பாக்கியம் நிலைக்க சுமங்கலி பெண்கள் புது தாலி மாற்றிக் கொள்ளவர். புதுமண பெண்ணுக்கு தாலி பிரித்து கோர்ப்பர். புது மற்றும் நல்ல காரியங்களை ஆடிப்பெருக்கன்று ஆரம்பித்தால் அந்த காரியம் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம். அதன்படி, ஆடி மாதம் 18ம் தேதியான இன்று (புதன்) ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கையொட்டி புதுச்சேரியில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. பெரிய மார்க்கெட்டில் ஒரு கிலோ மஞ்சள் சாமந்தி ரூ.120க்கு விற்றது. நேற்று இருமடங்கு அதிகரித்து ரூ.240க்கு விற்பனையானது.

அதுபோல், ரூ.280க்கு விற்ற அரும்பு ரூ.400க்கும், ரூ.400க்கு விற்ற மல்லி ரூ.600க்கும், ரூ.400க்கு விற்ற ஜாதி மல்லி ரூ.560க்கும், ரூ.100க்கு விற்ற ரோஜா ரூ.140க்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் பெண்கள் ஏராளமானோர் பூக்களை வாங்கிச் சென்றனர்.

Related Stories: