பாலக்காட்டில் தீவிர கனமழை பாறை, மரங்கள் சரிந்து போக்குவரத்து துண்டிப்பு-பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை கலெக்டர் அறிவிப்பு

பாலக்காடு :  நெல்லியாம்பதி - நெம்மாரா மலைப்பாதையில் பெருக்கெடுத்த மழைவெள்ளம் காரணமாக பாறைகள், மரங்கள் விழுந்து சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

கேரள மாநிலத்தில், கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளிலும் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பம்பா, மணிமலையாறு, காலடி மற்றும் பாரதப்புழா உட்பட அனைத்து ஆறுகளிலும் மழைவெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

பாலக்காடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த காரணமாக நெல்லியாம்பதி - நெம்மாரா மலைப்பாதையில் செருநெல்லி எஸ்டேட் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு, சாலையிலும், சாலையோரங்களிலும் மரங்கள், பாறைகள் குவிந்தன. இதனால் நெம்மாராவிலிருந்து போத்துண்டி வழியாக நெல்லியாம்பதிக்கும், நெல்லியாம்பதியிலிருந்து போத்துண்டி வழியாக நெம்மாராவிற்கும் இடையே போக்குவரத்து கடுமையாக துண்டிக்கப்பட்டது. நெம்மாராவிலிருந்து நெல்லியாம்பதிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள், அரசு போக்குவரத்து வாகனங்கள் ஆகியவை தடைபட்டது. நெல்லியாம்பதி பாடகிரியிலும், கைக்காட்டியிலும் உள்ள தாழ்வான பகுதிகளில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளநிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.

நெம்மாரா - நெல்லியாம்பதி - நெம்மாரா மலைப்பாதையில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன. இதையடுத்து இதனை தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் கட்டர் உபயோகித்து அப்புறப்படுத்தினர். நெல்லியாம்பதி மலைப்பாதையில் திடீர் மலையருவிகள் உருவானது. இந்நிலையில் சாலை துண்டிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் நெல்லியாம்பதி செல்வதற்கு மாவட்ட கலெக்டர் மிருண்மயி ஜோஷி தடைவிதித்து உத்தரவிட்டார்.

பாலக்காடு மாவட்டத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு மாவட்டம் மங்கலம் அணை, மலம்புழா, பரம்பிக்குளம், போத்துண்டி, காஞ்ஞிரப்புழா, சுள்ளியாறு, மீன்கரை ஆகிய அணைகள் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. மன்னார்க்காட்டிலிருந்து அட்டப்பாடிக்கு செல்லும் வழித்தடத்திலும், ஆனைமலையிலிருந்து பரம்பிக்குளம் செல்லும் வழித்தடத்திலும் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டது. இந்த வழித்தடத்தில் கனரக வாகனங்கள் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.

Related Stories: