தாண்டிக்குடி மலைச்சாலையில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு

பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களங்கொம்பு, மஞ்சள்பரப்பு, பண்ணைக்காடு, கே.சி.பட்டி, பாச்சர், கடுகுதடி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 29ம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக பெரும்பாறை-தாண்டிக்குடி மலைச்சாலையில்  பட்டலாங்காடு என்னும் இடத்தில் மழைத்தண்ணீர் அதிகளவு சென்றதால், மண்சரிவு ஏற்பட்டு ரோட்டின் பக்கவாட்டு பகுதியை காட்டாற்று தண்ணீர் அடித்து சென்றுவிட்டது.

இதன் காரணமாக பெரும்பாறையிலிருந்து தாண்டிக்குடி, பண்ணைக்காடு செல்லும் சாலையில் கடந்த 4 நாட்களாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.இப்பகுதியில் ஆத்தூர் உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறையினர் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் மண்மூட்டைகளை அடுக்கி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் மாரிமுத்துராஜா, கோட்ட பொறியாளர் ரமேஷ், உதவி கோட்ட பொறியாளர் கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது ஆத்தூர் உட்கோட்ட பொறியாளர் பரத், உதவி ஆய்வாளர் மஞ்சுநாத் ஆகியோர் உடனிருந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,பணிகள் முடிந்து 2 நாட்களில் போக்குவரத்து சீராகும் என்றனர்.

Related Stories: