தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட, துபாய்க்கு கடத்த முயன்ற தங்கம், வெள்ளி வெளிநாட்டு பணம் பறிமுதல் சென்னையில் 5 பேர் கைது

மீனம்பாக்கம்: தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட தங்கம், வெள்ளி மற்றும் சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் என மொத்தம் ரூ.88.12 லட்சத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து மும்பை பயணி உட்பட 5 பேரை கைது செய்தனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று வந்தது. அதில் வந்த பயணிகளை, சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது மும்பையை சேர்ந்த யூசுப் அப்துல்ரகுமான் (32), சென்னையை சேர்ந்த சங்கர் நாகராஜன் (30), முகமது அலி (32), ஜமால் முகமது (24), ஆகியோர் ஒரு குழுவாக தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா பயணிகளாக சென்று விட்டு திரும்பினர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால், நிறுத்தி சோதனையிட்டனர். உடைமைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.48.56 லட்சம் மதிப்புடைய 95.37 கிலோ வெள்ளி ஆபரணங்கள் மற்றும் வெள்ளி கட்டிகள் மற்றும் ரூ.15.19 லட்சம் மதிப்புடைய 343 கிராம் தங்க கட்டிகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் இருந்து துபாய் செல்லும் ஃபிளை துபாய் ஏர்வேஸ் விமானம் புறப்பட தயாரானது. இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த சலீம் (34), சுற்றுலா பயணி விசாவில் துபாய் செல்ல வந்தார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் உடமைகளை சோதனையிட்டனர். சூட்கேசை திறந்து பார்த்தபோது, ரகசிய அறை இருந்தது. அதை திறந்து பார்த்த போது, கட்டு கட்டாக சவுதி ரியால் கரன்சி மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

இந்திய மதிப்பு ரூ.24.37 லட்சம். அவற்றை பறிமுதல் செய்து சலீமை கைது செய்தனர். ஒரே நாளில் ரூபாய் 88.12 லட்சம் மதிப்புடைய தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டு, மும்பை பயணி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: