பொள்ளாச்சி-திண்டுக்கல் வரை புறவழிச்சாலை ரூ.2 ஆயிரம் கோடி மெகா பட்ஜெட்டில் தயாராகிறது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

பொள்ளாச்சி:  கோவை மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகர் பகுதியில் ஒன்றாக பொள்ளாச்சி விளங்குகிறது. இதனால் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப நாளுக்குநாள் வாகன நெருக்கடி அதிகமாக உள்ளது. பொள்ளாச்சி நகரிலிருந்து பிரிந்து செல்லும் கோவை ரோடு, வால்பாறை ரோடு, மீன்கரை ரோடு, பல்லடம் ரோடு, உடுமலை ரோடு என முக்கிய நெடுஞ்சாலை ரோடுகளில் பகல் மற்றும் இரவில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. மேலும் இவ்வழியாக கேரள மாநில பகுதிக்கும் அதிகளவு வாகனங்கள் சென்று வருவதால், நகர் பகுதி எப்போதும் பரபரப்புடன் இருக்கும். பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் வர்த்தக, வணிக நிறுவனங்கள் மட்டுமின்றி, பல்வேறு முக்கிய அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள் என ஓரிடத்தில் இருப்பதால் கிராமப்புறங்களிலிருந்து பொள்ளாச்சி நோக்கி வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் முக்கிய ரோடு வழியாக நகரில் வந்து செல்லும் வாகனங்களால், எதிர்காலத்தில் வாகன நெரிசல் மேலும் அதிகரிக்கும். அதிலும், பொள்ளாச்சி நகர் வழியாக செல்லும் கனரக வாகனங்களால், சில சமயங்களில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

பொள்ளாச்சி நகரத்தை அடையாமலேயே, புறநகர் வழியாக விரைந்து செல்வதற்கு வசதியாக, 5 ஆண்டுகளுக்கு  முன்பு, பொள்ளாச்சியில் இருந்து ஆரம்பித்து திண்டுக்கல் வரையிலும், நான்கு மற்றும் ஆறு வழியில் புறவழிச்சாலையை அமைக்க அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.இதைத்தொடர்ந்து,  பொள்ளாச்சி-கோவை ரோடு ஆச்சிப்பட்டியிலிருந்து திண்டுக்கல் வரையிலும் சுமார் 165 கிலோமீட்டர் தூரத்தில், தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.2 ஆயிரம் கோடி மெகா பட்ஜெட்டில் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.  இப்பணிகள் துவங்குவதற்கு முன்பாக, எந்தெந்த பகுதியில் நிலம் கையகப்படுத்துவது என, பல்வேறு கிராம மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் பல்வேறு கட்டமாக நடந்தது. பல்வேறு கட்ட கூட்டத்துக்கு பிறகு, 3 ஆண்டுகளுக்கு  முன்பு, கோவை ரோடு ஆச்சிப்பட்டியில் பூமி பூஜையுடன் புறவழிச்சாலை பணி துவங்கப்பட்டது.இந்த புறவழிச்சாலை பணி நிறைவடையும்போது, பொள்ளாச்சியிலிருந்து திண்டுக்கல் வரையிலான இடைபட்ட பகுதிகளான உடுமலை, மடத்துக்குளம்,  பழனி, ஒட்டன்சத்திரம் போன்ற நகரின் மையப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுவது மிகவும் குறையும்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வரையிலும் சுமார் 165 கிமீ தூரத்துக்கு, வெவ்வேறு இடங்களில். இடத்திற்கு தகுந்தாற்போல் 4  மற்றும் 6 வழியாக புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, பொள்ளாச்சி அருகே கிராமப்பகுதி, பழனி மற்றும் உடுமலை, மடத்துக்குளம் தாலுகா, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலும் தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த புறவழிச்சாலை அமைக்கப்பட்டால், மக்கள்தொகை அதிகமுள்ள பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதியினுள் கனரக வாகனங்கள் வந்து செல்வது குறைவாகவே இருக்கும். இன்னும் சில இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அந்த இடத்திலும் நிலம் கையகப்படுத்தியபின், பணிகள் மேலும் விரைவுபடுத்தி, புறவழிச்சாலை பணி மீதமுள்ள 75 சதவீதமும் விரைவில் பூர்த்தி அடையும். இவ்வாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப சாலை போக்குவரத்தும் நவீனம் அடைவது தவிர்க்க முடியாதது. அவசர அவசிய தேவை மட்டுமின்றி, சரக்கு, காய்கறிகளை சந்தப்படுத்தவும் தொழில் வளர்ச்சிக்கும் சாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இச்சூழலில் பொள்ளாச்சி-திண்டுக்கல் சாலை முழுமையாக நிறைவடைந்து, நெரிசல் குறைவு, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட அதிக பயன்களை பொள்ளாச்சி நகரப்பகுதி மக்களுக்கே அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

25 சதவீத பணிகள் நிறைவு

பொள்ளாச்சியில் ஆரம்பிக்கப்பட்ட புறவழிச்சாலை பணியில் முதற்கட்டமாக, சிறு  பாலங்கள் அகலப்படுத்தும் பணியும், மக்கள் தொகை அதிகமுள்ள கிராமப்புறங்களில்  தேவையான அளவிற்கு மேம்பாலம் அமைக்க ஆங்காங்கே கான்கிரீட் தூண்கள்  எழுப்பப்பட்டு, சமமாக்க ரோடு எழுப்பும் பணி நடந்தது.

இந்நிலையில்  ஓராண்டுக்கு முன்பு, புறவழிச்சாலை பணி தொய்வடைந்தது. இதையடுத்து கடந்த சில  மாதமாக இப்பணி மீண்டும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, பல்வேறு  இடங்களில் வாகனங்கள் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டது.தற்போது  சுமார் 25 சதவீத பணிகள் நிறைவடைந்தாலும், இன்னும் பணிகளை விரைவுபடுத்தி,  புறவழிச்சாலையை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பது அனைவரின்  எதிர்பார்ப்பாக உள்ளது.

தென்மாவட்ட இரவு நேர பயணம் இனி எளிதாகும்

புறவழிச்சாலை அமையும் இடங்களில் இருக்கும், விவசாய நிலங்கள், ரோட்டோர  மரங்கள், நீர்தேக்கம், குடிநீர் கொண்டு செல்லப்படும் பாதை உள்ளிட்டவை  கணக்கெடுக்கப்பட்டு அதற்கான மதிப்பீடு செய்யப்பட்டு, வெவ்வேறு கட்டமாக  வழங்கப்படுகிறது. பொள்ளாச்சி நகரிலிருந்து சுமார் 5 கிமீ தூரத்துக்கு  அப்பால் இருந்து புறவழிச்சாலை துவங்குவதால், சில இடங்களில் விவசாய நிலங்களே  அதிகம் கையகப்படுத்தப்படுகிறது. பொள்ளாச்சியிலிருந்து  திண்டுக்கல்  வரையிலான இந்த புறவழிச்சாலை பணி முழுமையாக நிறைவடையும்போது,   பல்வேறு பணி நிமித்தமாக வெளியூர்களுக்கு விரைந்து செல்வோர் மற்றும்  திண்டுக்கல் வழியாக மதுரையை கடந்து தென்மாவட்டங்களுக்கு இரவு நேரத்தில்  பயணிப்போர், குறிப்பிட்ட  மணி நேரத்தில் விரைந்து செல்ல மிகவும் வசதியாக  இருக்கும்.

Related Stories: