வால்பாறையில் தொடர் மழையால் நடுமலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

வால்பாறை:  வால்பாறை பகுதியில் தொடர்மழையால் பசுமையான தோட்டங்களுக்கு இடையே வளைந்தோடும் நடுமலை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த காட்சி சுற்றுலா பயணிகளை பரவசம் அடைய செய்துள்ளது.கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார பகுதியில் கடும் குளிர் நிலவுகிறது. வால்பாறையில் கடந்த 2 மாதங்களாக பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக மழை மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. தொடரும் மழையால், வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் கடும் குளிர் நிலவுகிறது. ஆறுகளில் நீர் வரத்தும் அதிகரித்து உள்ளது. இப்பகுதியில் பெய்துவரும் தொடர்மழையால் நடுமலை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து பெருக்கெடுத்து ஓடுகிறது. பசுமையான தோட்டங்கள் பின்னணியில் வளைந்து நெளியும் மலைச்சரிவில் மழைவெள்ளம் ஓடும் அழகிய காட்சி கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மேலும், குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக சின்னக்கல்லார், பெரியகல்லார், சிங்கோனா, குரங்குமுடி, ஷேக்கல்முடி, கவர்கல், ஆனைமுடி, அக்காமலை எஸ்டேட் உள்ளிட்ட வனப்பகுதிகளை ஓட்டிய எஸ்டேட்களில் குளிர் அதிகளவில் உள்ளது. மேலும், தோட்ட தொழிலாளர்கள் எஸ்டேட்களில் குளிர் காரணமாக விடுப்பு எடுத்து வருகின்றனர். தொடர் குளிரால் பள்ளி மாணவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். தொடர் குளிர் வால்பாறை பகுதி மக்களின் இயல்பு வாழ்கையை பெரிதும் பாதிப்படைய செய்துள்ளது.வால்பாறை பகுதியில் தொடர்மழை மற்றும் சூறைக்காற்றால் அபாயகரமான மரங்கள் விழும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், குடியிருப்பு பகுதிகளில் உள்ள உயர்ந்த மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும். வால்பாறை பிஏபி காலனியில் உள்ள மரங்கள், வால்பாறை பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை பின்புறம் உள்ள மரங்கள் குடியிருப்புகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.  எனவே, வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, அபாயகரமான மரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என குடியிருப்பு பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: