நத்தம் பூதகுடியில் மலையாண்டி கோயில் திருவிழா: பக்தர்கள் குவிந்தனர்

நத்தம்:  நத்தம் அருகே பூதகுடி மலையாண்டி கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நத்தம் அருகே பூதகுடியில் உள்ள சதுரகிரி மலையில் உள்ள மலையாண்டி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அமாவாசையை அடுத்து வரும் திங்கட்கிழமை திருவிழா நடைபெறும். அதன்படி நேற்று இக்கோயிலில்  திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.

இதையொட்டி அங்குள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேல்களுக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது. குழந்தை வரம் உள்ளிட்ட வேண்டுதல்கள் நிறைவேற்றியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மொட்டை எடுத்து  வேல்களை காணிக்கையாக செலுத்தினர். பல பெண்கள் மடிசோறு பெற்று குழந்தை பாக்கியத்திற்காக வேண்டுதல் வைத்தனர். தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.  இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) கிருஷ்ணன் மற்றும் நத்தம், கொட்டாம்பட்டி, சிங்கம்புணரி பகுதிகளை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் பூசாரிகள், பூதகுடி ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: