லாரியில் நாய்களுடன் வன விலங்கு வேட்டைக்கு வந்த 21 பேர் பிடிபட்டனர்: பெரம்பலூர் அருகே வனத்துறையினர் அதிரடி

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே வன விலங்கு வேட்டைக்கு வந்த 21 பேர் வனத்துறையிடம் சிக்கினர். அவர்களிடம் ரூ.60 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.பெரம்பலூர் மாவட்டத்தில் வன அலுவலர் குகனேஷ் உத்தரவின்பேரில் வனச்சரகர் பழனிக்குமரன் தலைமையில் வனவர் பிரதீப்குமார், வன காப்பாளர்கள் அன்பரசு, ஜஸ்டின் செல்வராசு, ரோஜா, செல்வக்குமாரி மற்றும் வன காவலர்கள் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் வேட்டை நாய்களுடன் லாரியில் வன விலங்குகளை வேட்டையாட ஒரு கும்பல் சென்றது தெரியவந்தது.இதையடுத்து 20 கிலோ மீட்டர் பின்தொடர்ந்து சென்று ஆத்தூர் சாலை எசனை பகுதியில் லாரியை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரித்தபோது எசனை காப்புக்காடு பகுதிக்கு வன விலங்கு வேட்டையாட சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரியில் வந்த 21 பேரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து பெரம்பலூர் வனச்சரகர் பழனிக்குமரன் கூறுகையில், திருச்சி- புதுக்கோட்டை மாவட்ட எல்லைகளில் விராலிமலை அருகே உள்ள கிராமத்திலிருந்து 4 சிறுவர்கள் உட்பட 21 பேர் லாரியில் 23 வேட்டை நாய்களுடன் சாப்பாட்டை கட்டி கொண்டு முயல் மற்றும் கீரிப்பிள்ளை, காட்டுப்பூனை, உடும்பு உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாட வந்துள்ளனர். இது வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இருந்தும் அவர்களிடம் இருந்து எந்த வனவிலங்கும் கைப்பற்றப்படவில்லை என்றார்.

மாவட்ட வன அலுவலர் குகனேஷ் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் வனவிலங்குகளை வேட்டையாட வெளிமாவட்டத்தினர் யாரும் வரக்கூடாது. வேட்டையாடி பிடிபட்டால் சிறை தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் யாராவது ஊர் திருவிழாவுக்காக வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து பிடிபட்ட 21 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.60 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்ட பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள தாத்தநாயக்கன்பட்டி வீரசக்கதேவி கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஆடி மாதத்தில் நல்லமழை பெய்து பயிர்கள் செழிப்பதற்காக விழா கொண்டாடுவது வழக்கம். விழாவுக்கு முன்னதாக வீரசக்கதேவிக்கு வேட்டையாடிய வன விலங்குகளை படைத்த பிறகே காப்பு கட்டி திருவிழா கொண்டாடப்படும். அதற்காக தான் வந்தோம். ஏற்கனவே வந்திருக்கிறோம். இப்போது மாட்டி கொண்டோம் என்று பிடிபட்டவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: