விடுமுறை நாளில் கூட்டம் அலைமோதியது அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்: ஆடிப்பூர உற்சவம் நிறைவாக இன்று தீமிதி விழா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஆடிப்பூர பிரமோற்சவத்தின் நிறைவு விழாவாக இன்று தீமிதி விழா நடைபெற உள்ளது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்காக உயர்கிறது.அதன்படி, ஞாயிறு விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அதையொட்டி, பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.

கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் தணிந்திருந்த நிலையில், நேற்று வெயில் அதிகரித்தது. எனவே, பக்தர்களின் வரிசையில் தரை விரிப்புகள் போடப்பட்டிருந்தன. பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.இந்நிலையில், கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடிப்பூர பிரமோற்சவத்தின் 9ம் நாள் விழா நேற்று நடந்தது. அதையொட்டி, அலங்கார ரூபத்தில் விநாயகர், பராசக்தி அம்மன் எழுந்தருளி மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.ஆடிப்பூர பிரமோற்சவம் இன்றுடன் நிறைவடைகிறது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் இன்று காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், வளைகாப்பு மண்டபத்தில் இன்று மாலை பராசக்தி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் வளைகாப்பு உற்சவமும் நடைபெறும். விழாவின் நிறைவாக, இரவு 11 மணியளவில் உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் தீமிதி விழாவும், பின்னர் அம்மன் திருவீதியுலாவும் நடைபெறும்.

Related Stories: