குருமாம்பேட் குப்பை கிடங்கில் பயோ கேஸ் பிளாண்ட் மூலம் 10 யூனிட் மின்சாரம் தயாரிப்பு: விரிவுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

வில்லியனூர்:  புதுச்சேரி குருமாம்பேட் குப்பை கிடங்கில் செயல்படும் பயோகேஸ் பிளாண்டை விரிவுப்படுத்தி அதிகளவு மின்சாரம் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் நகரம் மற்றும் கிராமங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் டன் கணக்கில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி செயற்கை மலை போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில் மார்க்கெட் பகுதிகளில் சேகரிக்கப்படும் அழுகிப்போன காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை குப்பையோடு குப்பையாக கொட்டாமல் கடந்த 2018ம் ஆண்டு இதனை வைத்து மின்சாரம் தயாரிக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி உழவர்கரை நகராட்சி சார்பில் புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுவின் நிதி மூலம் ரூ.19 லட்சத்து 90 ஆயிரம் செலவில் புதிதாக பயோ மீத்தேனேஷன் என்ற கேஸ் பிளாண்ட் திறக்கப்பட்டது. அதில் அழுகிய காய்கறிகள் மற்றும் பழங்களை ஒரு இயந்திரத்தில் போட்டு கூழாக்கி அதனை ஒரு கண்டய்னரில் வைத்து பாக்டீரியா மூலம் நொதித்தல் வினைக்கு உட்படுத்தி பெரிய டேங்கரில் சேமிக்கப்படுகிறது. பிறகு அதிலிருந்து குழாய் மூலமாக கேஸ் எடுத்து மின்சாரமாக மாற்றி அங்குள்ள மின் விளக்குகளை எரிய வைக்கப்படுகிறது.

இதுதொடர்பாக உழவர்கரை நகராட்சி அதிகாரி கூறுகையில், குருமாம்பேட் குப்பை கிடங்கில் மாசு கட்டுப்பாட்டு குழு மற்றும் உழவர்கரை நகராட்சி சார்பில் ரூ.22.38 லட்சம் செலவில் பயோ கேஸ் தயாரிக்கும் பிளாண்ட் துவங்கப்பட்டு 1 டன் கொள்ளளவு கொண்ட இயந்திரம் அமைக்கப்பட்டது. அதில் அழுகிப்போன பழங்கள், காய்கறிகள் மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் வீணாகும் அதிக நொதித்தல் தன்மை கொண்ட உணவுகள் என அதிகபட்சம் 500 கிலோ வரை இயந்திரத்தில் போட்டு கூழாக்கி 70 டிகிரி செல்சியசில் தெர்மோனிக் பாக்டீரியா மூலம் நொதிக்க வைத்து மீத்தேன் எரிக்கப்பட்டு பயோ கேஸ் தயாரிக்கப்பட்டு அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. தற்போது சிறிய அளவில் செய்வதால் 7 யூனிட் முதல் 10 யூனிட் வரை மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதனை கொண்டு அங்குள்ள மின்விளக்குகள் எரிய வைக்கப்படுகிறது. குப்பை கிடங்கில் அதிகளவு எல்இடி மின்விளக்குகள் பொருத்தப்படவுள்ளது. ஆகையால் 15 யூனிட் வரை மின்சாரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தற்போது இதனை மேலும் விரிவுப்படுத்தி 12 கிலோ வாட் திறன் கொண்ட ஜெனரேட்டரை இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் மூலம் குப்பை கிடங்கில் உள்ள அனைத்து எல்இடி மின் விளக்குகள் மற்றும் காய்கறிகளை கூழாக்கும் இயந்திரம் போன்றவற்றை சிறிதும் செலவின்றி இயக்குவதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். மின்சாரமும் சேமித்துக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது குப்பை கிடங்குக்கு ஒரு நாளைக்கு 1,000 கிலோவுக்கும் மேல் அழுகிய பழங்கள், காய்கறிகள், உணவு வகைகள் வருகிறது. ஆகவே இதனை முழுமையாக பயோ கேஸ் தயாரிக்க இந்த திட்டத்தை இன்னும் விரிவுப்படுத்தி புதுச்சேரியில் பெரியளவில் மின்சாரம் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: