தந்தையுடன் தகராறில் மகன் வெறிச்செயல் தீக்குச்சியை கொளுத்தி வீசியதில் பட்டாசுகள் வெடித்து வீடு இடிந்தது: வாலாஜாவில் பரபரப்பு

வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா சுப்புராயர் தெருவை சேர்ந்தவர் தரணி(45). இவர் வீட்டிலேயே பட்டாசு தயாரிக்கும் வேலை செய்துள்ளார். இவரது மகன் நிர்மல்(20), இன்ஜினியரிங் மாணவன். உறவினர்களின் பட்டாசு கடைகளுக்கு தரணிதான் பட்டாசு தயாரித்து கொடுத்து வந்துள்ளார். இதையறிந்த நிர்மல், ‘கூலிக்கு பட்டாசு தயாரித்து தருவதை விட நாம் தயாரிக்கும் பட்டாசை சொந்தமாக விற்பனை செய்யலாம்’ என தந்தையிடம் கூறி வந்தார். நேற்று முன்தினம் இதுதொடர்பாக தந்தை, மகன் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பில் முடிந்தது.

இந்நிலையில், அப்பகுதியில் கடந்த வாரம் நடந்த திருவிழாவுக்காக தரணி சரவெடி பட்டாசுகள் தயாரித்துள்ளார். அவற்றை முதல் மாடியில் வைத்துள்ளார். நேற்று காலை 11 மணியளவில் அங்கு வந்த நிர்மல், தந்தையிடம் மீண்டும் தகராறு செய்து பட்டாசு வைத்திருந்த அறையில் தீக்குச்சியை கொளுத்தி வீசினார். இதில் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் தந்தை, மகன் லேசான காயம் அடைந்தனர். மேலும் மாடியின் அறை, கைப்பிடி சுவரும் இடிந்து விழுந்தது. வீட்டின் மேற்கூரையின் ஒரு பகுதியும் பெயர்ந்து விழுந்தது. அதோடு அங்கிருந்த பொருட்களும் சேதமானது. அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளும் லேசாக அதிர்ந்துள்ளது. புகாரின்படி தந்தை, மகனிடம் வாலாஜா போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: