கோயில் தேரோட்டத்தில் விபரீதம் தேர் கவிழ்ந்து 5 பக்தர்கள் காயம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து 5 பக்தர்கள் காயமடைந்தனர். புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் கோகர்னேஸ்வர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 9 நாட்களுக்கு முன் துவங்கியது. இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(31ம் தேதி) காலை 8.50 மணிக்கு நடந்தது. முதல் தேரில் விநாயகர், 2வது தேரில் முருகன், 3வது தேரில் பிரகதாம்பாள், 4வது தேரில் சண்டிஸ்கேஸ்வரர் சுவாமிகள் சென்றனர். தேர்களை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்து சென்றனர். 3வது தேர் சக்கரத்துக்கு அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் அவ்வப்போது தேரை நிறுத்த, கட்டை போடும் பணியை செய்து வந்தார்.

திடீரென பக்தர்கள் வேகமாக தேரை பிடித்து இழுத்தனர். இதில் தேர் கட்டை மீது ஏறிய வேகத்தில் திடீரென முன்னோக்கி சாய்ந்து கவிழ்ந்தது. அப்போது தேருக்கு அருகில் சென்று கொண்டிருந்த பக்தர்கள் தேருக்கு அடியில் சிக்கினர்.

திருக்கோகர்ணம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தேருக்கு அடியில் சிக்கி காயமடைந்த கலா, வைரவன், தேர் சக்கரத்துக்கு கட்டை போடும் ராஜா, குமார் உட்பட 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சாய்ந்து கிடந்த தேரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.இந்த தகவல் கிடைத்ததும் கலெக்டர் கவிதா ராமு, எம்எல்ஏ முத்துராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இந்த தேர் 5 ஆண்டுகளுக்கு முன்பு தான் புதிதாக செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: