குன்னூரில் புதர்மண்டி கிடக்கும் ஹன்கூன்தொரை ஆறு: தூர்வார மக்கள் கோரிக்கை

குன்னூர்: குன்னூரில், ஹன்கூன்தொரை ஆறு என அழைக்கப்படும் சிற்றாறு தற்போது புதர் மண்டி காட்சியளிக்கிறது. இதனை அகலப்படுத்தி, தூர்வார வேண்டும் என குன்னூர் நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் நீர் குன்னூர், பஸ் ஸ்டாண்டில் சங்கமித்து, பவானி ஆற்றில் கலக்கிறது. இந்த சிற்றாறுகள், குப்பைகள், துணி மூட்டைகள், இறைச்சி கழிவுகள் கொட்டுவது, கழிவுநீர் கலப்பது என முழுமையாக மாசுபட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு அப்போதைய கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தீவிர முயற்சியால், தனியாரிடம் நிதி பெற்று நீலகிரி மாவட்ட நிர்வாகம், நகராட்சி மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன்  ‘கிளீன் குன்னூர்’  தன்னார்வ அமைப்பு சார்பில் 2 முறை தூர்வாரப்பட்டது. இந்நிலையில், குன்னூரின் பழமையான ஹன்கூன்தொரை ஆறு கடந்த 1847ம் ஆண்டில், 100 அடி வரை அகலம் இருந்தது. ஆனால், இந்த ஆறு பெயர் மாற்றி அழைப்பதற்கு ஏற்ப தற்போது சிற்றாறாக மாறியுள்ளது.

தற்போது, 10 முதல் 20 அடி வரை மட்டுமே உள்ள இந்த ஆற்றில் புதர்கள், செடிகள் சூழ்ந்து குப்பைகள் கொட்டுவதாலும், கழிவுநீர் கலப்பதாலும் மிகவும் மோசமான நிலையில் காட்சியளிக்கிறது. சிலேட்டர் ஹவுசில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் அவ்வப்போது கலந்து விடுவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.  எனவே, பழமையான ஆற்றை மீண்டும் அகலப்படுத்தி, தூர்வார வேண்டும் என குன்னூர் நகராட்சி பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: