இந்திய அளவில் 6வது இடத்தை பிடித்தாலும்: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிறப்பு துறைகளுக்காக காத்திருக்கும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை...

*அரசு நடவடிக்கை எடுக்க மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு

* இளநிலை, முதுநிலை நர்சிங் படிப்பு கொண்டுவர கோரிக்கை

வேலூர்: இந்திய அளவில் 6 வது இடத்தை பிடித்திருந்தாலும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிறப்பு துறைகளுக்காகவும், இளநிலை, முதுநிலை நர்சிங் படிப்புகளுக்காகவும் வேலூர் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனை காத்திருக்கிறது. எனவே இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேலூர் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், வேலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையான ஜிபிஎச் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக நிலை உயர்த்தப்பட்டு, கடந்த 2005ம் ஆண்டு முதல் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் வேலூர் அடுத்த அடுக்கம்பாறையில், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக இயங்கி வருகிறது.

100 எம்பிபிஎஸ் இடங்களுடன், 50க்கும் அதிகமான இடங்களுடன் முதுகலை படிப்புகளில் எம்.டி. பொது மருத்துவம், மயக்கவியல், குழந்தைகள் மருத்துவம் படிப்புகளும் எம்.எஸ்., தாய்சேய் மருத்துவம், எம்.எஸ்., சர்ஜரி போன்ற படிப்புகளுடன் இயங்கி வரும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டிப்ளமோ இன் நர்சிங், லேப் டெக்னீசியன், மருத்துவ உதவியாளர் என்று மருத்துவம் சார்ந்த படிப்புகளும் உள்ளன. மருத்துவமனையை பொறுத்தவரை 600 படுக்கை வசதிகளுடன், நாள்தோறும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் வரை புறநோயாளிகள் வந்து செல்கின்றனர்.

உள்நோயாளிகளாக 450 பேர் வரை சிகிச்சை பெறுகின்றனர். பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு மற்றும் முடநீக்கியல், இ.என்.டி, கண் சிகிச்சை பிரிவு, இரைப்பை மற்றும் குடல் சிகிச்சை பிரிவு, தோல் நோய் சிகிச்சை பிரிவு, தாய்சேய் நலப்பிரிவு பிரிவு, சிசு சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, மனநலப்பிரிவு, சிறுநீரகப்பிரிவு, இருதய சிகிச்சை பிரிவு, காசநோய் பிரிவு, தீ சிகிச்சை பிரிவு, அவசரகால விபத்து சிகிச்சை பிரிவு என்று பல்வேறு பிரிவுகளுடன் மருத்துவமனை இயங்கி வருகிறது. பிஐசியு, என்ஐசியு, மேக்னடிக் ரெசோனென்ஸ் இமேஜிங், கம்ப்யூட்டரைஸ்டு எக்ஸ்ரே, கம்ப்யூட்டட் டெமோ கிராபி, எக்கோ கார்டியோ கிராபி, கார்டியக் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் என்று பல்வேறு சிறப்பு வசதிகளும் ஏற்கனவே உள்ள ஆய்வக வசதிகளுடன் உள்ளன. மேலும் நவீன ரத்த வங்கி, ஆயுஷ் எனப்படும் இந்திய மருத்துவம் சார்ந்த பிரிவும் உள்ளது. அதேபோல் கொரோனா நெருக்கடி சூழலில் ெகாரோனா பரிசோதனை வசதியும் இங்கு வந்துள்ளது.

அதேநேரத்தில் இருதய மாற்று அறுவை சிகிச்சை பிரிவு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்று மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை வசதிகளும், செயற்கை கருத்தரிப்பு மையம் போன்ற சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான வசதிகளை வேலூர் அரசு மருத்துவமனைக்கு செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது.இந்த சிகிச்சைகளை மேற்கொள்ள தற்போதைய நிலையில் உள்ளூரில் உள்ள தனியார் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளுக்கோ, சென்னை, பெங்களூரு மருத்துவமனைகளுக்கோ செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதை தவிர்க்க வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே மேற்கண்ட உறுப்பு மாற்று சிகிச்சை வசதியையும், செயற்கை கருத்தரிப்பு மையம் போன்ற உயர்சிகிச்சைகளை வேலூர் மாவட்ட மக்களுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் சார்ந்த டி.பார்ம், எம்.பார்ம், பி.எஸ்சி நர்சிங், எம்.எஸ்சி நர்சிங், பூச்சியியல் உட்பட பல்வேறு சான்றிதழ், இளநிலை, முதுநிலை படிப்புகளையும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் மாவட்ட மக்களால் வைக்கப்படுகிறது.

Related Stories: