கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகும் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் தொடரும் இல்லம் தேடி கல்வி திட்டம்-அதிகாரிகள் தகவல்

பொள்ளாச்சி :  தமிழகத்தில், கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக, மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இதனால், பள்ளி சென்று பயில முடியாமல் மாணவர்கள் வேதனையடைந்தனர். இருப்பினும் பல மாதமாக, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன.

 இதற்கிடையே, கொரோனா தளர்வு இல்லாத நேரத்தில், பள்ளி செல்ல  முடியாத சூழ்நிலையில், மாணவர்களின் படிப்பு திறன் மற்றும் வாசிப்பு திறனை அதிகப்படுத்த, கடந்த 2021ம் ஆண்டில், இல்லம் தேடி கல்வி என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தில் தன்னார்வலர்கள் மூலம், கிராமம் கிராமமாக  மாணவர்களின் வீட்டிற்கே சென்று கல்வி கற்றுகொடுக்கும் பணி நடைபெற்றது.

 அதிலும், கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு, வடக்கு மற்றும் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம பகுதிகளில், இல்லம் தேடி கல்வி மூலம், மாணவர்கள் பலரும் பயனடைந்துள்ளனர். இதில், ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட 19 ஊராட்சி மற்றும் கோட்டூர், ஆனைமலை, ஒடையக்குளம், சேத்துமடை பேரூராட்சிக்குட்பட்ட குக்கிராமங்களில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின்கீழ் சுமார் 400க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

 இந்த திட்டத்தில் இணைந்துள்ள  தன்னார்வலர்கள், 1 முதல் 8வகுப்புடைய மாணவர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று கல்வி கற்பித்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இக்கல்வியாண்டில் கொரோனா பரவல் மிகவும் குறைவால், நடப்பாண்டில் கடந்த ஜூன் மாதம் இரண்டாவது வாரத்திலிருந்தே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

 இருப்பினும், மாணவர்களின் வாசிப்பு திறன் மற்றும் கல்வி அறிவு, பேச்சுத்திறனை அதிகப்படுத்தும் நோக்கத்தில், கொரோனா முழுமையான தளர்வுக்கு பிறகும் தொடர்ந்து இல்லம் தேடி கல்வி திட்ட செயல்படுவது பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

 இதுகுறித்து, ஆனைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், ‘கொரோனா ஊரடங்கு காலத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு கொண்டுவந்த, இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம், நகர் மட்டுமின்றி கிராமபுறங்களை சேர்ந்த மாணவர்கள் பலரும் பயனடைந்துள்ளனர். கொரோனா காலத்தில் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக, மாணவர்களுக்கு எப்படி பாடம் கற்றுகொடுக்கப்பட்டு வந்ததோ, அதபோல் தற்போது கொரோனா முழுயைமாக தளர்வுக்கு பிறகும், இல்லம் தேடி கல்வி செயல்பாடு தொடர்கிறது.

 ஊராட்சி ஒன்றியம் மற்றும் வட்டார கல்வி அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில், பணியாற்றும் தன்னார்வலர்கள், தினமும் மாலை நேரத்தில் மட்டுமின்றி விடுமுறை நாட்களிலும், மாணவர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று கல்வி கற்பித்து கொடுப்பதை தொடர்கின்றனர். அதிலும், மாணவர்கள் வாசிப்பு திறனை அதிகப்படுத்த, அந்தத கிராமத்தில் அரசு பள்ளியோ அல்லது ஏதேனும் பொது இடத்திலேயோ இந்த செயல்பாடு தொடர்கிறது. இந்த திட்டத்தின் மூலம், பள்ளி குழந்தைகளின் கல்வி தரம் உயர்கிறது, வாசிப்பு திறன் வளர்கிறது.

நாளுக்கு நாள்  கிராமபுற மாணவர்கள், கல்வி பயில இன்னும் ஆர்வமாக உள்ளனர். இல்லம் தேடி கல்வி செயல்பாடு தொடர்வது, அனைத்து தரப்பு மக்களிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இந்த திட்டத்தில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு, மாதத்தில் குறிப்பிட்ட நாட்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனை வழங்கப்படுகிறது. இதில், சிறப்பாக பணியாற்றிய அனைத்து தன்னார்வலர்களுக்கும் அண்மையில் சான்று வழங்கப்பட்டுள்ளது. குறைவான ஊதியம் பெற்றாலும், பள்ளி குழந்தைகளுக்கு நிறைவாக கல்வியை கற்றுகொடுப்பது, மாணவர்களின் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’,என்றார்.

Related Stories: