செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண வசதியாக சுற்றுலா துறையின் 30 நட்பு வாகனங்கள்; அமைச்சர் மதிவேந்தன் துவக்கினார்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நாளை முதல் வரும் ஆகஸ்ட் 10ம் தேதிவரை போர் பாயிண்ட்-செரட்டான் நட்சத்திர விடுதியின் பிரமாண்ட அரங்கில் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதனால் மாமல்லபுரத்தில் தற்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இந்நிலையில், சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நம்ம செஸ், நம்ம பெருமை என்ற வாசகம் பொறித்த 5 பஸ்கள், 25 ஆட்டோக்கள் சுற்றுலா நட்பு வாகனம் என்ற வாசகங்களுடன் இலவச பயணத்தை நேற்று மாலை தமிழக சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து அறநிலையத் துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், சுற்றுலா மற்றும் நிர்வாக இயக்குனர் சந்தீப் நந்தூரி, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மதிவேந்தன் கூறுகையில், மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து மாமல்லபுரம் வரை 14 நிறுத்தங்களில் 5 பஸ்கள் நிற்கும். இதேபோல் மாமல்லபுரத்தில் 25 ஆட்டோக்கள் நட்பு வாகனங்களாக செயல்படும். இந்த வாகனங்களில் ஏறுபவர்களிடம் கனிவாக பேச வேண்டும், குறைந்த கட்டணம் வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

Related Stories: