நெடுஞ்சாலை ஒப்பந்த பணி மோசடி வழக்கு எடப்பாடி பழனிச்சாமி சிறை செல்வது உறுதி: நெல்லை மாவட்ட புதிய செயலாளர் தர்மலிங்கம் பேச்சு

நெல்லை: நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் கோடி கணக்கில் எடப்பாடி பழனிச்சாமி மோசடி செய்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது. இதில் அவர் சிறை செல்வது உறுதி என ஓபிஎஸ் அணியின் நெல்லை மாவட்ட புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட தர்மலிங்கம் பேசினார்.அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக பொதுக்குழுவை கூட்டி ஓபிஎஸ்சை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக இபிஎஸ் அறிவித்தார். பதிலுக்கு ஓபிஎஸ்சும், இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகளிடையே பனிப்போர் நடந்து வருகிறது. இதையடுத்து ஓபிஎஸ் புதிதாக கட்சி நிர்வாகிகளை அறிவித்து வருகிறார்.

தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை புதிதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். அதன்படி நெல்லை மாநகர் மாவட்ட ஓபிஎஸ் அணி செயலாளராக முன்னாள் எம்எல்ஏ தர்மலிங்கம், புறநகர் மாவட்ட செயலாளராக முன்னாள் அரசு வழக்கறிஞர் சிவலிங்கமுத்து ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தர்மலிங்கம், சென்னையில் ஓபிஎஸ்சை சந்தித்து விட்டு இன்று நெல்லை வந்தார். வண்ணார்பேட்டையில் அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அவர் பேசியதாவது:நெல்லை மாவட்டத்தில் 1989ம் ஆண்டிலிருந்து ஜெயலலிதாவின் ஆசியுடன் கட்சியில் பல்வேறு பொறுப்புக்களில் பணியாற்றியுள்ளேன். தற்போது அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள், எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த பணத்திற்காக வேலை செய்கிறார்கள்.

இதனால் தொண்டர்கள் யாரும் எந்த பயனும் அடையவில்லை. பொதுக்குழுவிற்கும், ஆர்ப்பாட்டத்திற்கும் கோடி கணக்கில் வாரி இறைத்து செலவு செய்து ஆட்களை திரட்டிய எடப்பாடி, உள்ளாட்சி தேர்தலில் எங்கு சென்றார்? உள்ளாட்சி தேர்தலில் ஏன் அக்கறை காட்டவில்லை? அந்த தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு எந்த ஆதரவும் இல்லாமல் தவிக்க விட்டவர்கள், இன்று தங்களுடைய சுயநலத்திற்காக ஓபிஎஸ்சை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளனர். நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் கோடி கணக்கில் எடப்பாடி பழனிச்சாமி மோசடி செய்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது. இதில் அவர் சிறை செல்வது உறுதி. எனவே ஓபிஎஸ்சின் பின்னால் ஒன்றரை கோடி தொண்டர்களும் வருவார்கள். அதிமுக அவரது தலைமையின் கீழ் வரும். விரைவில் அதிமுகவை ஓபிஎஸ் கைப்பற்றுவார். அப்போது முக்கிய நிர்வாகிகள் அவரிடம் வந்து இணைவார்கள்.

Related Stories: