திருவண்ணாமலை மாவட்டத்தில் விடிய விடிய பரவலான கன மழை-சாத்தனூர் அணை நீர்மட்டம் 106 அடியாக உயர்ந்தது

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று பரவலான மழை பெய்தது. அதிகபட்சமாக, தண்டராம்பட்டில் 59 மி.மீ. மழை பதிவானது. மேலும், சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 1200 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி, அதிகாலை வரை பரவலான மழை பெய்தது.

திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் காலை 9 மணிவரையிலும் மிதமான மழை நீடித்தது. அதைத்தொடர்ந்து, மழை ஒய்ந்து, இதமான சூழ்நிலை காணப்பட்டது. பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் முற்றிலுமாக குறைந்திருந்தது. மீண்டும் மாலையில் மழை மேகம் திரண்டு காணப்பட்டது.இந்நிலையில், மாவட்டத்தில் அதிகபட்சமாக தண்டராம்பட்டில் 59 மிமீ மழை பதிவானது. அதேபோல், ஆரணியில் 20 மிமீ, செய்யாறில் 13 மிமீ, செங்கத்தில் 36.40 மிமீ, ஜமுனாமரத்தூரில் 8 மிமீ, வந்தவாசியில் 26 மிமீ, போளூரில் 16.60 மிமீ, திருவண்ணாமலையில் 16.30 மிமீ, கலசபாக்கத்தில் 27 மிமீ, சேத்துப்பட்டில் 3.20 மிமீ, வெம்பாக்கத்தில் 26.20 மிமீ மழை பதிவானது.

மேலும், கிருஷ்ணகிரி அணையில் இருந்தும், ஊத்தங்கரை பாம்பாறு அணையில் இருந்தும் உபரி நீர் தென்பெண்ணை ஆற்றின் வழியாக வெளியேற்றப்படுவதால், திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியில் அமைந்துள்ள சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்திருக்கிறது.அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அதனால், அணையின் மொத்த நீர்மட்ட உயரமான 119 அடியில், தற்போது 106.50 அடி நிரம்பியிருக்கிறது. அணையின் கொள்ளளவான 7321 மில்லியன் கன அடியில், தற்போது 4,795 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இதுமொத்த கொள்ளளவில் 65.50 சதவீத நீர் இருப்பாகும்.

ஆண்டுதோறும் வழக்கமாக வட கிழக்கு பருவமழை தீவிரமடையும் அக்டோபர் மாதத்தில்தான் அணையின் நீர்கொள்ளளவு இந்த அளவில் உயர்ந்திருக்கும். ஆனால், பருவமழை காலம் தொடங்கும் முன்பே, இந்த ஆண்டு 65.50 சதவீதம் நிரம்பியிருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதேபோல், குப்பனத்தம் அணையின் மொத்த உயரமான 59.04 அடியில் 46.53 அடியும், மிருகண்டா அணையின் மொத்த உயரமான 22.97 அடியில் 18.04 அடியும், செண்பகத்தோப்பு அணையின் மொத்த உயரமான 62.32 அடியில் 48.61 அடியும் தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எனவே, பருவமழையின் தொடக்கத்திலேயே இந்த அணைகள் முழு கொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: