காசி விசுவநாதர் கோயில் குளத்தை தூர்வாரி படிக்கட்டுகளுடன் சீரமைக்க வேண்டும்-வேலூர் சலவன்பேட்டை மக்கள் கோரிக்கை

வேலூர் : வேலூர் சலவன்பேட்டையில் உள்ள காசி விசுவநாதர் கோயில் குளத்தை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேலூர் சலவன்பேட்டை அம்மணாங்குட்டையில் பழமை வாய்ந்த காசி விசுவநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலை ஒட்டி வற்றாத சுனை அமைப்பில் இயற்கையாக அமைந்த கோயில் குளமும் உள்ளது. இக்குளம் காசி விசுவநாதர் கோயில் மட்டுமின்றி வேலூர் கிராம தேவதை ஆனைகுளத்தம்மன் கோயிலுக்கும் தொடர்புடையதாகும்.

கிராம தேவதை ஆனைகுளத்தம்மன் கோயில் தலவரலாற்றுடன் தொடர்புடைய இக்குளம் ஆகாயத்தாமரை மற்றும் செடி, கொடிகளால் மூடப்பட்டுள்ளதுடன், குளத்துக்கான படிகளை தேடவேண்டிய அவலநிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் சமுதாய கூடத்தை திறந்து வைக்க வந்த எம்எல்ஏ கார்த்திகேயனும், மேயர் சுஜாதாவும் இக்குளத்துக்கு சுற்றுச்சுவர் அமைப்பதுடன், முறையாக பராமரிக்க வேண்டும் என்று அறநிலையத்துறையினரிடம் கூறினர். எனவே, இக்கோயில் குளத்தை சீரமைத்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: