வேலூர் மாநகராட்சியில் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு வக்பு வாரிய இடத்தில் மனை வழங்கி வீடு கட்டி தர வேண்டும்-குறைதீர்வு கூட்டத்தில் இஸ்லாமிய பெண்கள் திரண்டதால் பரபரப்பு

வேலூர் : வேலூர் மாநகராட்சியில் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு வக்பு வாரிய இடத்தில் வீட்டுமனை வழங்கி குடியிருப்பு கட்டி தர வேண்டும் என்று வலியுறுத்தி 1,500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. டிஆர்ஓ ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், குடியாத்தம் அடுத்த சின்னதோட்டாளம் பகுதியை சேர்ந்த அம்சா அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனக்கு 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது. இதற்காக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவியான தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2019ம் ஆண்டு 8 கிராம் தங்கம் பெற்றுக்கொண்டேன். ஆனால் ரொக்கப்பணமான ₹50 ஆயிரம் வரவில்லை. இதுகுறித்து நான் கலெக்டரிடம் மனு அளித்தேன். பின்னர், அவரது அறிவுறுத்தலின்பேரில் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகினேன். அப்போது எனக்கு ₹50 ஆயிரம் உதவித்தொகை அனுப்பியுள்ளதாக கூறினார். ஆனால் எனது வங்கிக்கணக்கிற்கு வரவில்லை.

வங்கிக்கணக்கை ஆய்வு செய்தபோது எனக்கு வரவேண்டிய பணம் குடியாத்தம் பாண்டிநகர் நேதாஜி தெருவை சேர்ந்த சாந்தி என்பவரின் வங்கிக்கணக்கிற்கு சென்றிருப்பது தெரியவந்தது. உடனே சாந்தியின் விலாசத்தில் சென்று விசாரித்தபோது, சாந்தி என்பவருக்கு மகளே இல்லை என்பதும், அவர் வங்கிக்கணக்கிற்கு வந்த ₹50 ஆயிரத்தை செலவு செய்துவிட்டதாகவும், சாந்தி இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். எனவே, எனது திருமண உதவித்தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

தமாகா வேலூர் மாநகர மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமையில் கட்சியினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு வீட்டு வரியும் உயர்த்தப்பட்டது. தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கை தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உயர்த்திய வீட்டுவரி, சொத்துவரி, மின்கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

தொடர்ந்து விசிகவின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில துணை செயலாளர் அஸ்லாம் தலைமையில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் ஆண்கள் தனித்தனியாக அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சைதாப்பேட்டை, பிடிசி.ரோடு, கஸ்பா, வசந்தபுரம், கொணவட்டம், அரியூர் போன்ற பகுதிகளில் 1,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். நாங்கள் தினமும் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறோம். வாடகை வீட்டிற்கே எங்களுடைய வருமானம் பாதிக்கு மேல் சென்றுவிடுகிறது. போதிய வருமானமின்றி தவிக்கிறோம். எங்களுக்கு நிரந்தர குடியிருப்பு கிடையாது.

வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடம் அரியூரில் பல ஏக்கரில் உள்ளது. அந்த இடத்தில் எங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கி குடியிருப்பு கட்டி தர வேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்ைல. எனவே இதுகுறித்து ஆய்வு செய்து எங்களுக்கு குடியிருக்க வீடுகளை கட்டி தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மனு மீது உடனடி நடவடிக்கை எடுத்த கலெக்டர்

குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாந்தி(46). கணவரால் கைவிடப்பட்டவர். கடந்த 15 ஆண்டுளாக கூலி வேலை செய்து வருகிறார். மேலும் தற்போது மகன் பிளஸ் 1 படித்து வருகிறார். வறுமையால் பாதிக்கப்பட்ட பெண் தையல் இயந்திரம் வழங்குமாறு நேற்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்று கொண்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உடனடியாக அதிகாரிகள் அழைத்து தையல் இயந்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் உடனடியாக அவருக்கு தையல் இயந்திரத்தை கலெக்டர் வழங்கினார். இயந்திரத்தை பெற்று கொண்ட சாந்தி கலெக்டருக்கு நன்றி தெரிவித்தார்.

Related Stories: