நீட் தேர்வில் தோல்வியால் மாணவி ஸ்ரீமதி தற்கொலை: திண்டுக்கல் சீனிவாசன் புது தகவல்

திண்டுக்கல்: நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டார் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதால், அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘‘கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார்’’ என பேசினார். இதனை கேட்டு அங்கிருந்த அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மேடையில் இருந்தவர்கள் அவருக்கு அருகே சென்று திருத்தி கூறினர்.

இதனையடுத்து சுதாரித்துக்கொண்டு, நிருபர்களைப் பார்த்து ‘‘அந்த மாணவி நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்யவில்லை. மர்மமான முறையில் இறந்தார் என மாற்றி எழுதிக் கொள்ளுங்கள்’’ என்று பேசினார். பின்னர் அளித்த பேட்டில், ‘‘யார் குற்றம் செய்தாலும் குற்றம் குற்றமே. ஒன்றிய அரசாக இருந்தாலும் மாநில அரசாக இருந்தாலும். மக்களுக்கு நன்மை செய்வதாக இருந்தால் அதனை ஏற்றுக் கொள்வோம். அவ்வாறு இல்லை என்றால் யாராக இருந்தாலும் எதிர்ப்போம்’’ என்றார்.

Related Stories: