ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் கருப்பு நிறமாக மாறிய மழைநீர்; நோய் பரவுவதால் மக்கள் அச்சம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் மழைநீர் கருப்பு கலராக மாறியதால் மக்களுக்கு நோய் தாக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். நேற்று காலை முதல் பிற்பகல் 3 மணி வரை வெயில் மக்களை வாட்டிவதைத்து வந்த நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு திடீரென கனமழை பெய்தது. திருவள்ளூர் சாலையில் உள்ள பழைய பெட்ரோல் பங்க் எதிரில் மழைநீர் தேங்கியது. கடந்த சில நாட்களாக கால்வாய் தூர் வாரும் பணி நடந்து வருகிறது.

இதன்காரணமாக கால்வாயில் இருந்த கழிவுகளை வாரி கால்வாயின் அருகில் கொட்டி வைத்துள்ளனர். இதனால் கழிவுகள் கலந்துவிட்டதால் மழைநீர் கருப்பு கலராக மாறியது. இதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் மக்களுக்கு நோய்கள் தாக்கம் ஆபத்துள்ளது. மேலும் அவ்வழியாக நடந்து செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்கின்றவர்கள் மற்றும் வாகனங்களில் செல்கின்றவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு மழைநீரை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: