சின்னசேலம் தனியார் பள்ளியில் வன்முறை; 10 இடங்களில் 3 நாளாக கலவரக்காரர்களுக்கு கறிசோறு, மதுவிருந்து ஏற்பாடு செய்தது யார்? சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

கள்ளக்குறிச்சி: தனியார் பள்ளியில் கலவரம் செய்வதற்கு வெளியூர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து 10 இடங்களில் தங்கவைத்து மூன்று நாட்கள் கறிசோறு, மதுவிருந்து கொடுத்த நபர்கள் குறித்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவி மதி கடந்த 13 ம்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி மரணத்திற்கு நீதிகேட்டு கடந்த 17ம்தேதி அந்த பள்ளியில் முன்னாள் மாணவர்கள், இளைஞர்கள் என்ற பெயரில் சில அமைப்பினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் அந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில் பள்ளி பேருந்துகள், காவல்துறை வாகனம் ஆகியவை தீ வைத்து எரிக்கப்பட்டன. பள்ளி கட்டிடங்களும், தளவாட பொருட்களும், மாணவர்களின் சான்றிதழ்கள், ஆவணங்களும் எரிக்கப்பட்டன.

இந்த கலவரத்திற்கு தூண்டுகோலாக இருந்தது யார்? அவர்களை வாட்ஸ்அப் குரூப் மூலம் அழைத்து ஒருங்கிணைத்தது யார்? என்பது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு: இந்த கலவரத்திற்கு முன்பு தனியார் பள்ளி அருகே கனியாமூர் கிராம சுற்றுபுறத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் 200 பேர் 14ம் தேதிக்கு பின்னர் மூன்று நாட்களாக அந்த பகுதியில் உள்ள வீடுகளில் தங்கி கலவரம் செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும், இவர்களுக்கு கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து கறிவெட்டும் ஆட்கள் மற்றும் சமையலர்களை அழைத்து வந்து மூன்று நாட்களாக அதாவது 15ம்தேதி அன்று முதல் 17ம்தேதி மதியம் வரை மூன்று வேளையும் கறிசோறு, மதுவிருந்து வழங்கியது தெரியவந்துள்ளது.

இந்த கலவரக்காரர்கள் அந்த பகுதியில் தனியாக உள்ள வீடுகளில் உறவினர்கள் போல் தங்கி இருந்ததாகவும் இவர்களுக்கு தங்க இடம் கொடுத்தது யார்? இவர்களை அழைத்துவந்து அடைக்கலம் கொடுத்தது யார்? என்றும் கறிசோறு சமைத்து கொடுத்தது, மதுவிருந்து ஏற்பாடு செய்தவர்கள் யார்? கறிவெட்டு ஆட்கள், சமையலர்கள் யார் யார்? என்பது குறித்தும் சிறப்பு புலனாய்வு குழுவினர் அப்பகுதியில் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனையடுத்து அந்த பகுதியில் தங்கியிருந்த கலவரக்காரர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் ஏதேனும் அமைப்புகளை சேர்ந்தவர்களா? என்றும் இந்த கலவரத்தில் ஈடுபட திட்டம் தீட்டி கொடுத்தது யார்? என்பது குறித்தும் சிறப்பு புலனாய்வு குழுவினர்கள் துருவி துருவி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அந்த பள்ளி கலவரத்திற்கு முன்பு அந்த பகுதியில் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி கைதட்டி ஆக்ரோசமாக ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாகவும் இவர்களை சிலர் திட்டமிட்டு போராட்டத்திற்கு அழைத்து வந்ததாக கிடைத்த தகவலின் பேரிலும் இவர்களை அங்கு வரவழைத்தது யார் என்பது குறித்தும் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கலவரக்காரர்களை அழைத்து வந்தவர்களை கைது செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் சிறப்பு புலனாய்வு குழுவினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Related Stories: