அக்னிபாதை திட்டத்தில் முதல் நியமனம் நாடு முழுவதும் 250 மையங்களில் அக்னிவீரர் வாயு நுழைவுத்தேர்வு

ராஞ்சி: புதிதாக தொடங்கப்பட்ட அக்னிபாதை திட்டத்தின் கீழ் அக்னிவீரர் வாயு நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் 250 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.  ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை சேர்க்கும் அக்னிபாதை திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த குறுகிய கால ஆட்சேர்ப்பு திட்டத்துக்கு எதிர்க்கட்சிகளும், இளைஞர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் பயங்கர வன்முறை வெடித்தது. ரயில்கள் எரிக்கப்பட்டன.  

இந்நிலையில், இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, இந்திய விமானப்படைக்கு வீரர்களை சேர்ப்பதற்கான, ‘அக்னிவீரர் வாயு நுழைவுத்தேர்வு’ நாடு முழுவதும் 250 மையங்களில் நேற்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 24ம் தேதி முதல் ஆன்லைனில் தொடங்கியது. தேர்வு எழுதுவதற்கான அடையாள அட்டை 22ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வு நேற்று காலை 7.30, முற்பகல் 11.30 பிற்பகல் 3 மணி என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. 12ம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் அமைந்திருந்ததாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். நேர்மை, நியாயமான முறையில் தேர்வு நடப்பதை உறுதி செய்வதற்காக மையங்களுக்கு வெளியே பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

* எதிர்காலம் பாதிப்பு ராகுல் காந்தி எதிர்ப்பு

அக்னிபாத் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஓய்வு பெறுகிறார்கள், அதில், வெறும் 3 ஆயிரம்  பேருக்குத்தான் அரசு வேலை கிடைக்கிறது. அப்படி இருக்கும் போது, 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் வெளியே வரும் ஆயிரக்கணக்கான அக்னிவீரர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? பிரதமரின் இந்த புதிய ஆராய்ச்சியால் நாட்டின் பாதுகாப்புக்கும் ஆபத்து; இளைஞர்களின் எதிர்காலமும் ஆபத்தில் முடிகிறது,’ என கூறியுள்ளார்.

Related Stories: