தாராபுரம் சுற்றுவட்டார கால்நடைகளுக்கு சுவைக்காக ‘கிராக்கி’ 3 சந்தைகளில் ரூ.10 கோடிக்கு ஆடு, மாடு வியாபாரம்: அடிப்படை வசதிகளை மேம்படுத்த வியாபாரிகள் கோரிக்கை

தாராபுரம்: தாராபுரம் பகுதியில் செயல்படும் 3 பழமையான வாரச்சந்தைகள் மூலம் மாதத்திற்கு ரூ.10 கோடி அளவுக்கு ஆடு, மாடு வர்த்தகம் மும்முரமாக நடக்கிறது. இதனை அதிகப்படுத்த அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வியாபாரிகள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில், கன்னிவாடி, குண்டடம், தாராபுரம் என 3 இடங்களில் ஆடு, மாடு வாரச்சந்தைகள் கூடுகின்றன. இந்த சந்தைகள் பழமையான, பிரசித்தி பெற்ற சந்தைகள். கன்னிவாடி சந்தையை கன்னிவாடி பேரூராட்சியும், குண்டடம் சந்தையை ருத்ராவதி பேரூராட்சியும், தாராபுரம் சந்தையை தாராபுரம் நகராட்சியும் பராமரித்து வருகின்றன.

இதில் குறிப்பாக தாராபுரம் சந்தையில் கடந்த 25 ஆண்டுக்கு முன்பு 25 கடைகள் கட்டப்பட்டன. இங்குள்ள சோளக்கடைவீதி ஒரு காலத்தில் மிகவும் பிஸியாக இருந்தது. இப்போது நகராட்சி கட்டிய கடைகள் பழுதடைந்து கிடக்கின்றன. கன்னிவாடி, குண்டடம் ஆகிய இரு சந்தைகளுக்கு அதிகளவில் வியாபாரிகள், விவசாயிகள் வருகின்றனர். ஆடு, மாடு வியாபாரம் மும்முரமாக நடக்கிறது. ஆனால்,  தாராபுரம் சந்தை நகருக்கு உட்பகுதியில் ஊருக்குள் இருப்பதால் அதிக வியாபாரிகள், விவசாயிகள் கூடுவதில் சிரமம் நிலவுகிறது. இதற்கு மாறாக, கன்னிவாடி, குண்டடம் சந்தைகள் டவுன் சாலையில் இருப்பதால் வியாபாரிகள் வருவதற்கு எளிதாக இருக்கிறது. கன்னிவாடியில் 4 ஆயிரம் ஆடுகளும், ஆயிரம் மாடுகளும் விற்பனையாகின்றன.

குண்டடம் சந்தையில், 1,500 மாடுகளும், 1,000 ஆடுகளும், தாராபுரம் சந்தையில், 500 ஆடு, மாடுகளும் ஒரு மாதத்தில் விற்பனையாகும். இந்த சந்தைகளில் இருந்துதான் அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிகளவில் அடிமாடுகள் வாகனங்களில் பயணமாகின்றன. இதற்கு, இப்பகுதியில் வளர்க்கப்படும் ஆடு, மாடுகளின் இறைச்சி மிகவும் சுவையாக இருப்பதே காரணமாகும். நிலத்தில் சுண்ணாம்பு (கால்சியம்) சத்து அதிகமிருப்பதால் இதில் வளரும் புல், பூண்டு, பயிர்களை உண்டு வளரும் கால்நடைகள் இறைச்சி சுவையாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேற்கண்ட 3 சந்தைகளிலும் 40 ஆயிரம் ஆடு, மாடுகள் ஒரு மாதத்தில் விற்பனைக்கு வரும். 10 ஆயிரம் பேர் கூடுவர். மாதம்தோறும் ரூ.10 கோடி அளவுக்கு சந்தைகளில் ஆடு, மாடு வியாபாரம் ஜரூராக நடக்கும். ஆடு, மாடுகளின் இறைச்சி சுவையாக இருப்பதற்கு, தாராபுரம் சுற்றுவட்டாரத்தில் மண்ணில் இயற்கையாகவே உள்ள சுண்ணாம்பு சத்து காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் மழை அதிகம் பெய்யாத பகுதியாகவும் உள்ளது. அமராவதி ஆற்றை நம்பி நன்செய், புன்செய் நிலங்களில் விவசாயம் நடக்கிறது. மற்ற பகுதிகளில் கிணறுகள் கைகொடுத்தால் மட்டுமே விவசாயம் நடக்கும்.

மேட்டாங்காடுகளில் விவசாயம் செய்ய முடியாத நிலை நிலவுகிறது.

இதனால் விவசாயிகள், மேய்ச்சல் நிலங்களாக நிலத்தை பயன்படுத்துகின்றனர். இங்கு வளர்க்கப்படும் புல், பூண்டுகள் கால்நடைகளுக்கு உணவாகின்றன. இவ்வாறு, தாராபுரம் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 55 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மேய்ச்சல் நிலம் உருவாக்கப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் இந்த நிலங்களில் கொள்ளு, தட்டப்பயிர், எள்ளு, சோளம் ஆகியவை பயிரிடப்படுகிறது. இந்நிலையில் ஆடு, மாடு சந்தைக்கு பெயர் பெற்ற தாராபுரம் வாரச்சந்தை வாரத்தில் செவ்வாய்க்கிழமை கூடுகிறது. இங்கு அடிப்படை வசதிகள் இல்லை. 25 ஆண்டுக்கு முன்பு கட்டிய கடைகளையும் வியாபாரிகள் பயன்படுத்துவதில்லை. டெண்ட் அடித்து சந்தையை நடத்தி முடித்துவிட்டு கலைந்து சென்று விடுகின்றனர்.

இதனால் தாராபுரம் சந்தைக்கு வியாபாரிகளும், விவசாயிகளும் அதிகம் வரும் வகையில் புதிய கடைகள் கட்டப்பட வேண்டும். மினி பஸ் போக்குவரத்தை சந்தை பகுதிக்கு நீட்டித்து இயக்க வேண்டும். கரூர், பழனி, மதுரை நகரங்களில் இருந்து வெளியூர் பஸ்கள் சந்தை பகுதிக்கு வந்து செல்லும் வகையில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும். இப்பணிகளை தாராபுரம் நகராட்சி நிர்வாகம் முடுக்கி விட்டால், வாரச்சந்தை மூலம் அதிக வருவாய் கிடைக்கும். பழமையான பெருமையை தாராபுரம் மீட்பதற்கும் வழி ஏற்படும் என்கின்றனர், விவசாயிகள், வியாபாரிகள்.

Related Stories: