வேறு ஒருவருடன் கள்ள தொடர்பு வைத்திருந்ததால் 2வது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவன்: கடலூரில் பயங்கரம்


கடலூர்: கடலூர் முதுநகர் அருகே சோனங்குப்பத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் ரமேஷ் (37). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி இந்துமதி (35). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரமேஷ், இந்துமதியின் தங்கையான சூர்யா (33) என்பவரையும் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். ரமேஷ் வெளிநாட்டில் வேலை பார்த்த போது சூர்யா கடலூர் முதுநகரில் வேறு ஒரு நபருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை பலமுறை ரமேஷ் கண்டித்துள்ளார். இருப்பினும் சூர்யா கள்ளத்தொடர்பை கைவிடவில்லை என்று தெரிகிறது. இதன் பிறகு ரமேஷ் கடந்த ஆறு மாதங்கள் முன் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். பின்னர் உறவினர்களும், குடும்பத்தாரும் சமாதானம் பேசி சூர்யாவை ரமேஷ் உடன் ஒழுங்காக குடும்பம் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதன் பிறகு கடலூர் முதுநகர் சோனகர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை சூர்யாவுக்கும் ரமேஷுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சூர்யாவின் கழுத்து கை மற்றும் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சூர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ரமேஷ் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரி-சோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய ரமேஷை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூர் முதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post வேறு ஒருவருடன் கள்ள தொடர்பு வைத்திருந்ததால் 2வது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவன்: கடலூரில் பயங்கரம் appeared first on Dinakaran.

Related Stories: