28ம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு விடுமுறை; நேரு ஸ்டேடியத்தில் மோடி, மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பிரமாண்ட விழா: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்கவிழா 28ம் தேதி நடக்க உள்ளதால், அன்றைய தினம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார். விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

மாமல்லபுரத்தில் வருகிற 28ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள் வருகை குறித்த விவரங்கள், விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், வீரர்கள் தங்குமிட வசதிகள், தொடக்க விழா மற்றும் நிறைவு விழா ஏற்பாடுகள், அழைக்கப்படும் முக்கிய அழைப்பாளர்கள், விழிப்புணர்வு நடவடிக்கைகள், செஸ் ஒலிம்பியாட் தீபம் உள்ளிட்டவை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், சென்னை விமான நிலையத்தில் விளையாட்டு வீரர்களுக்காக ஏற்படுத்தப்பட்டு வரும் வசதிகள் குறித்து நேரில் ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அதுகுறித்த விவரங்களை முதல்வரிடம் எடுத்துரைத்தார். 44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டரங்கம், போட்டிகள் நடைபெறும் மாமல்லபுரம் ஆகிய இடங்களில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் விளக்கினார். சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலைநிகழ்ச்சிகள், Hop-on-Hop-off பேருந்து வசதிகள் உள்ளிட்டவை குறித்து அமைச்சர் மதிவேந்தன் விளக்கினார். அதுமட்டுமின்றி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு வருகிற 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று காலை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் சென்னை, பெரியமேடு பகுதியில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தை நேரில் பார்வையிட்டனர்.

இங்கு தான் வருகிற 28ம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கின்றனர். இதுதவிர உலகம் முழுவதும் 190 நாடுகளில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

விழாவில், தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்ட கலைநிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன் ஏற்பாடுகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, மெய்யநாதன் நேரில் பார்த்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

முதல்வர் தலைமையில் நேற்று முன்தினம் செஸ் ஒலிம்பியாட் போட்டி சம்பந்தமாக குழுவில் இருக்கிற தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர், விளையாட்டு துறை செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அந்த குழுவில் இடம் பெற்றிருக்கிற நான், விளையாட்டு துறை அமைச்சர், சுற்றுலாதுறை அமைச்சர் அனைவரும் கலந்து கொண்டோம்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா வருகிற 28ம் தேதி மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. சென்னையில் நடக்கின்ற காரணத்தினால் உள்ளூர் விடுமுறை விடலாம் என்று முடிவு செய்யப்பட்டு சென்னை மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டமான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடலாம் என்று முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். எனவே வருகிற 28ம் தேதி இந்த பகுதியில் கட்டாயம் உள்ளூர் விடுமுறை இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: