மருத்துவர்களின் அலட்சியத்தால் வலியால் துடித்து கர்ப்பிணி பெண் பலி: உ.பி முதல்வர் தொகுதியில் அவலம்

கோரக்பூர்: உ.பி முதல்வர் தொகுதிக்கு உட்பட்ட கோரக்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிப் பெண் வலியால் துடித்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் சித்தார்த்நகரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணான சந்திரா திரிபாதி என்பவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் உடனடியாக கவனிக்காமல் அலட்சியம் காட்டி வந்தனர். கிட்டதிட்ட 5 மணி நேரமாக அந்தப் பெண்ணுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவில்லை. உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால், கர்ப்பிணி பெண் பரிதாபமாக மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இதையடுத்து, ஆத்திரமடைந்த குடும்பத்தினர், மருத்துவக் கல்லுாரியில் மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

தகவலறிந்த போலீசார், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை சமாதானப்படுத்தி அனுப்பினர். இதுகுறித்து அந்த ெபண்ணின் கணவர் சந்தீப் கூறுகையில், ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என்பதால், இந்த மருத்துவமனையில் கர்ப்பிணி மனைவியை உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்த்தேன். ஆனால், ஓபிடி படிவத்தை பூர்த்தி செய்வதாக கூறி, மருத்துவர்களும் ஊழியர்களும் நீண்ட நேரமாக அங்கும் இங்கும் சென்றனர்.

அவர்கள் எனது மனைவிக்கு உடனடி சிகிச்சை அளிக்கவில்லை. அதனால் நோயாளிகளின் முன்பதிவு மையம் அருகே எனது மனைவி வலியால் துடித்த நிலையில் உயிரிழந்தார். முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியாக இருந்தும், இங்குள்ள மருத்துவர்கள்  அலட்சியமாக பணியாற்றுகின்றனர். அரசின் திட்டங்கள், கொள்கைகள், அறிவுறுத்தல்கள் அனைத்தையும் கிடப்பில்  போட்டுவிட்டு பணியாற்றி வருகின்றனர்’ என்று சோகத்துடன் கூறினார்.

Related Stories: