கடலூர்: மாணவி ஸ்ரீமதியின் உடலை மருத்துவமனையில் இருந்து எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியுள்ளது. இன்று காலை மருத்துவமனையில் மாணவி ஸ்ரீமதியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவி ஸ்ரீமதியின் உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு புறப்பட்டது.
மாணவி ஸ்ரீமதியின் உடல் கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு முன்பும், பின்பும் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து சென்றது. அதில் போலீசார் வாகனம், செய்தியாளர்கள் வாகனம், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வாகனம் என பல வாகனங்கள் சென்றது.
இந்தநிலையில், வேப்பூர் அருகே ஆம்புலன்ஸ் வாகனம் சென்று கொண்டிருந்த போது திடீரென தனியார் வாகனம் ஒன்று அதன் வேகத்தை குறைத்துள்ளது. இதன் காரணமாக போலீசார் சென்ற வாகனத்தின் மீது அந்த தனியார் வாகனம் லேசாக மோதியுள்ளது. இதனையடுத்து அந்த தனியார் வாகனம் பின்னால் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பெரிய சேதங்கள் ஏற்படவில்லை. ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன் பக்கத்தில் சிறிது சேதங்கள் மட்டுமே ஆனது. அதனை அடுத்து போலீசார் அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை பரிசோதித்து, மாணவி ஸ்ரீமதியின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர்.