நைனார் குப்பம் பகுதியில் சாலையில் குவிக்கப்பட்ட மண் குவியல்: போக்குவரத்துக்கு இடையூறு

செய்யூர்: நைனார் குப்பம் பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் மழை நீரை வெளியேற்றுவதற்காக சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை சாலையில் கொட்டியதை அகற்றாததால் போக்குவரத்து இடையூராக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிபட்டு வருகின்றனர். இது குறித்து பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட 1வது வார்டில் நைனார் குப்பம் உள்ளது.

இப்பகுதியில், கடந்த ஆண்டு பருவமழையின்போது குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் குட்டைபோல் தேங்கி இருந்தது. அதிலும், குறிப்பாக காளியம்மன் கோயில் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் மழைநீர் அதிகளவில் தேங்கியிருந்தது. மழைநீர் வடியாததால், இப்பகுதி வாசிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், மழை நீரை வெளியேற்ற கோரி பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர்.  இதனை தொடர்ந்து,  பேரூராட்சி நிர்வாகத்தினர் ஜேசிபி இயந்திரம்  மூலம் சாலையோரம் நீண்ட தூரம் பள்ளம் தோண்டி மழைநீரை வெளியேற்றினர்.  

இதில், கடந்த ஒரு வருடங்களுக்கு முன் தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை  சாலையோரமே கொட்டப்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள சாலை குறுகியுள்ளது. அதனால், எதிரில் வாகனங்கள்  வரும்போது அப்பகுதியை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும், பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சாலையோரம் உள்ள மண்ணை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: