கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள்: விதைச்சான்று உதவி இயக்குநர் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களையும் தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றுவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள திருவாலங்காடு வட்டாரம், மாமண்டூர், ஆர்.கே.பேட்டை வட்டாரம், வங்கனூர் மற்றும் பள்ளிப்பட்டு வட்டாரம் பெருமாநல்லூர் ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள விதை பண்ணைகளை திருவள்ளூர் மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநர் ஜீவராணி  ஆய்வு மேற்கொண்டார்.

இப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கோ - 51 ரக நெல் விதைப்பண்ணை மற்றும் வம்பன் - 8 உளுந்து விதைப்பண்ணைகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது திருத்தணி விதைச்சான்று அலுவலர் இளையராஜா உடனிருந்தார். தொடர்ந்து விதைப்பண்ணை வயலாய்வு மேற்கொண்டு, விதையின் தன்மை ஆராய்தல், விதைப்பண்ணை பரப்பினை கணித்தல், பயிர் விலகு தூரம் கணக்கிடல், கலவன்கள், குறித்தறிவிக்கப்பட்ட நோய் தாக்கிய செடிகள், கொடிய களை விதைப் பயிர்களை கணக்கெடுப்பு செய்யப்பட்டது.

கோ - 51 நெல் வகையானது ஆர்.ஆர். 272 - 1745 மற்றும் ஏடிடீ - 43 போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும். 105 - 110 நாட்கள் வயதுடையது. இவை மிதமான சன்ன ரக நெல், ஒரு ஏக்கருக்கு சுமார் 1.5 - 2 டன் மகசூல் தரக்கூடிய தன்மையுடையது. நடுத்தர உயரம் மற்றும் சாயாத ரகமாகும்.மேலும், அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் வாயிலாக விதைப்பண்ணைகள் பதிவு செய்யப்பட்டு திருவள்ளுர் மாவட்டத்திற்கு ஏற்ற இரகங்களான 120 - 125 நாட்கள் வயதுடைய ஏடிடீ - 39, ஆர்என்ஆர் - 15048, எம்டியூ - 1010 மற்றும் 135 - 140 வயதுடைய மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி ஆகிய இரகங்களில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டு விதை உற்பத்தி செய்யப்பட்டது. எனவே, சான்று பெற்ற விதைகள் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி விதைகளைப் பெற்று பயனடையுமாறு மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநர் என்.ஜீவராணி கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: