கலைஞர் நகர்ப்புற வளர்ச்சி திட்டம் மூலம் பட்டதாரி இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராக நூலக வசதியுடன் கூடிய நவீன அறிவு சார் மையம்: நகராட்சி ஆணையர் தகவல்

திருவள்ளூர்: பட்டதாரி இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையிலும், குழந்தைகள் புத்தி கூர்மையுடன் பூங்காவில் விளையாடும் வகையில் திருவள்ளூர் நகராட்சியில் புதிதாக நூலக வசதியுடன் நவீன அறிவு சார் மையம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதோடு, இதற்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற உள்ளதாகவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்டந்தோறும் படித்த பட்டதாரி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான திட்டங்கள் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், காவல் சீருடை பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குடிமைப்பணிகள் தேர்வு, ரயில்வே மற்றும் வங்கி தேர்வாணையம் உள்பட பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

இத்தேர்வில் பங்கேற்கும் வகையில் பயிற்சி மையங்கள் தலைநகரங்களில் செயல்பட்டு வருகிறது. ஆனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் செலவு செய்து சென்னை போன்ற நகரங்களுக்கு சென்று பயிற்சி பெற முடியாத நிலையுள்ளது. இதைக் கருத்திற்கொண்டு பல்வேறு போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்த இளைஞர்களுக்கு தேவையான அனைத்து வசதியும் ஒரே இடத்தில் கிடைக்கவும், குழந்தைகள் விரும்பும் வகையில் விளையாட்டு புத்தி கூர்மையுடன் கூடிய பூங்கா வளாகமும் அமைய வேண்டும்.

இதை அடிப்படையாகக் கொண்டு நகராட்சிகளில் கலைஞர் நகர்ப்புற வளர்ச்சி திட்டம் மூலம் நூலக வசதியுடன் கூடிய நவீன அறிவு சார் மையம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, பொன்னேரி, திருநின்றவூர், திருவேற்காடு ஆகிய நகராட்சிகள் உள்ளன. இதில் முதல் கட்டமாக மாவட்ட தலைநகரங்களில் உள்ள நகராட்சிகளில் தரைதளம், முதல் தளம் போதுமான இடவசதியுடன் அனைத்து வகையான போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையிலான அனைத்து நூல்களுடன் கூடிய நூலகம், பயிற்சி வளாகம், புத்தகம் படிக்கும் அறை, ஆன்லைன் மூலம் புத்தகம் வாசிக்கும் வகையில் கணிப்பொறிகள் அறை, படிகள் மற்றும் பதிவிறக்கம் செய்வதற்கான வசதி, மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து புத்தகம் படிக்கும் வகையில் சாய்தள வசதியுடன் கூடிய வளாகம், வாகன நிறுத்தும் வசதி அமையவுள்ளது.

அதேபோல், இந்த வளாகத்தை சுற்றிலும் குழந்தைகள் விரும்பும் வகையிலும், புத்தி கூர்மை பெறவும் விளையாட்டுடன் கூடிய பூங்காவும் இடம் பெறவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து திருவள்ளூர் நகராட்சி ஆணையாளர் க. ராஜலட்சுமி கூறியதாவது: இந்த நகராட்சியில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பட்டதாரிகள் செலவு செய்து தலைநகரத்தில் பயிற்சி மையங்களுக்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

அதனால், பட்டதாரிகள் போட்டித் தேர்வுக்கு ஒரே இடத்தில் தயாராகும் வகையிலும், குழந்தைகள் புத்தி கூர்மை மற்றும் விளையாட்டுடன் கூடிய பூங்காவுடன் அனைத்து நூல்களும் அடங்கிய நூலகத்துடன் நவீன அறிவு சார் மையம் அமைக்கப்பட உள்ளது.  இப்பணிக்காக கலைஞர் நகர்ப்புற வளர்ச்சி திட்டம் மூலம் ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில்  திருவள்ளூர்  நகராட்சியில்  தலைமை அஞ்சலம் பின்புறம் உள்ள ஜெயின் நகரில் இடம் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories: