கொடைக்கானலில் 5 மாதங்களில் 50 தற்கொலைகள்?... அதிர்ச்சி தகவல்

கொடைக்கானல்: அமைதியை தேடி கொடைக்கானலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பலர் படையெடுத்து வரும் நிலையில் கொடைக்கானல் மலைபகுதிகளில் இருப்பவர்கள் தற்கொலை முடிவை நோக்கி செல்வதாக கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்ட போது ஏற்பட்ட கடனில் இருந்து மீளமுடியாதவர்கள் தற்கொலை முடிவு எடுப்பதாக கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலைப்பகுதியை காண்பதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானவர்கள் கொடைக்கானல் மலைபகுதிக்கு வந்து செல்கின்றனர்.

 மேகங்கள் தவழும் மலை முகடுகளும் விண்ணை முட்டும் மரங்களும் கொடைக்கானலுக்கு சிறப்பு அம்சமாக உள்ளது. இதனால் மன அமைதியை விரும்புவோர் கொடைக்கானலுக்கு வருவதும் அவர்களுக்கு மன அமைதி கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கொடைக்கானல் மலைபகுதிகளிலே வாழக்கூடிய இளம்வயதினர் சமீப காலங்களில் தற்கொலையில் ஈடுபடுவது அதிகரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 50 க்கும் மேற்பட்டோர் தற்கொலைகள் செய்திருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுபவர்களை அங்குள்ள மக்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர்.

ஆபத்தான நிலையில் இருந்தால் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனை அல்லது மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபடுவதாகவும், மலைச்சாலையில் பயணம் செய்வதற்குள் உயிர் போய்விடுவதாகவும்  கொடைக்கானல் பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் 35 வயதுக்கு உள்பட்ட இளம் வயதினராகவே இருப்பதாக கூறப்படுவதும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே கொடைக்கானல் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் அழுகுறல்கள் கேட்டு கொண்டே இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தற்கொலைகள் அதிகரித்து வந்தாலும் காவல் துறை தரப்பில் இருந்து வழக்கு மட்டுமே பதிவு செய்யப்படுவதாகவும் அதன்பிறகு தற்கொலைக்களுக்கான முழுமையான காரணங்கள் விசாரிக்கப்படுவது இல்லை என்று ஒரு குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

இது தொடர்பாக கொடைக்கானல் பகுதிகளில் விசாரித்த போது கொரோனா காலகட்டத்தில் சுற்றுலாத் தலங்கள் நீண்ட நாள் மூடப்பட்டதால் அதை பிரதான தொழிலாக நம்பி இருந்தவர்கள் கடன் நெருக்கடிக்குள் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக கூறுகின்றனர். கொரோனாவுக்கு பிந்தைய காலக்கட்டத்தில் வேலையிழப்பு கடன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் இளைஞர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதாகவும் பெரும்பாலும் அது போன்ற காரணங்களால் தான் இளைஞர்கள் விபரீத முடிவுகள் எடுப்பதாகவும் கூறுகின்றனர். கொடைக்கானலில் போதை பொருள்கள் எளிதில் கிடைப்பதாகவும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொடைக்கானலில் இளைஞர்கள் படிக்க கல்லூரிகள் இல்லாததால் மேற்படிப்புக்கு செல்லாத சிலர் திசை மாறி சென்று வாழ்க்கையை சீரழித்து கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதை மீறி சில சம்பவங்கள் அரங்கேறுவதாகவும் கூறுகின்றனர். அமைதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து கொடைக்கானலை மக்கள் தேடி வரும் நிலையில் கொடைக்கானலில் இருப்பவர்கள் தற்கொலையை நாடி செல்வதைத் தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரங்களை தீவிரபடுத்துவதுடன் அவர்களின் பிரச்சினைகளை தீர ஆராய்ந்து அதை கலைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமுக ஆர்வலர்கள் கேட்டுகொண்டுள்ளனர்.

Related Stories: