மூணாறில் சேறு சகதி சாலை கவிழ்க்குது ஆளை சீரமைக்க மக்கள் கோரிக்கை

மூணாறு:  கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் மூணாறு மற்றும் சுற்றுப்புற எஸ்டேட் பகுதிகளில் உள்ள சாலைகள் சேறும் சகதியுமாக உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். மூணாறு நகரை அடுத்த பெரியவாரை புதுக்காடு எஸ்டேட்டிற்கு செல்ல காலனி வழியாக 4 கிலோமிட்டர் பயணம் செய்தால் போதும். இதில் தேயிலை தோட்டம் வழியாக கடந்து செல்லும் 1.5 கிலோமீட்டர் சாலையில் சுமார் 500 மீட்டர் தூரம் தற்போதும் மண்சாலையாகவே உள்ளது. இந்த பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. மேலும் சாலையில் காணப்படும் பாறைகளும் இவ்வழியே உள்ள பயணத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

2020ல் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தில் பெரியவாரை பாலம் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அப்போது மூணாறில் இருந்து மறையூர், உடுமலை போன்ற பகுதிகளுக்கு செல்ல பெரியவாரை எஸ்டேட் புதுக்காடு டிவிஷன் வழியாக செல்லும் இந்த சாலை வழியாக தான் பயணம் செய்தனர். எனவே முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பல வருடங்களாக மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை தீர்வு காணப்படவில்லை. மக்கள் கூறுகையில், மழைக்காலங்களில் இந்த வழியே செல்வது பெரும் சிரமமாக இருப்பதால் புதுக்காடு எஸ்டேட் தொழிலாளர்கள் பல கிலோ மீட்டர்கள் சுற்றி மூணாறு சென்று வர வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மூணாறு நகரில் வேலை செய்பவர்கள் பெரும் மன சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சேதமடைந்து கிடக்கும் சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: