மணல் கடத்தலை தடுக்க முயன்றபோது லாரி ஏற்றி டிஎஸ்பி கொலை: அரியானாவில் பயங்கரம்

குருகிராம்: அரியானாவில் சட்டவிரோத மணல் கடத்தலை தடுக்க முயன்ற டிஎஸ்பி லாரி ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரியானாவின் நுஹ் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுப்பதற்காக டிஎஸ்பி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை பச்கோன் பகுதியில் உள்ள ஆரவள்ளி மலையில் மணல் கடத்தலை தடுத்து நிறுத்துவதற்காக திடீர் சோதனை நடத்தப்பட்டது. டிஎஸ்பி சுரேந்திர சிங் தலைமையிலான குழுவினர் இந்த பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பக்கமாக மணல் ஏற்றி வந்த லாரியின் ஆவணங்களை சோதனை செய்வதற்காக டிஎஸ்பி நிறுத்தும்படி லாரி ஓட்டுனருக்கு கை காட்டினார்.

ஆனால் அந்த லாரி வேகமாக வந்து டிஎஸ்பி மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. லாரி மோதி பலத்த காயமடைந்த டிஎஸ்பி உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் டிஎஸ்பி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறி உள்ளார்.

Related Stories: