காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் பணிகளை நள்ளிரவில் மேயர் திடீர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகர பகுதிகளில் நடைபெற்ற வந்த பணிகளை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி நள்ளிரவில் திடீர் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாநகர பகுதிகளில் பிரதான பிரச்னையாக பாதாள சாக்கடை அடைப்பு பிரச்னையானது இருந்து வருகிறது. இதனை போக்கும் வகையில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகமானது ரோபோடிக் இயந்திரம் மூலம் சரிசெய்ய திட்டமிட்டு அதற்கான முன்னோட்டமாக பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் ரோபோடிக் இயந்திரத்தின் பயன்பாடு மற்றும் அதன் செய்முறை பயிற்சி விளக்கத்திற்கென அடைப்பு அதிகமுள்ள பகுதிகளில் ரோபோட்டிக் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு அடைப்பு நீக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் காஞ்சிபுரம் கம்மாள தெரு பகுதியில் தனியார் நிறுவன ஊழியர்களின் உதவியுடன் பாதாள சாக்கடை இணைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்னையை சரிசெய்யும் பொருட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் நடைபெற்ற வந்த செய்முறை பயிற்சி பணியை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அடைப்பு பிரச்னை அதிகமுள்ள பகுதிகளில் முறையான பணிகளை மேற்கொள்ளவும் ஊழியர்களிடம் அறுவுறுத்தினார்.

அதனைதொடர்ந்து மேற்கு ராஜவீதி பகுதியில் தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டு வந்த தூய்மை பணியை ஆய்வு மேற்கொண்ட அவர் பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்து முகக்கவசம், கையுறைகள் அணிந்து பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்ளவும் கேட்டுகொண்டார். ஆய்வின்போது, 3வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜோதிலட்சுமி சிவாஜி, அதிகாரிகள் என பலர் உடனிருந்தனர். மாநகர பகுதிகளில் அன்றாட இரவு நேரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நள்ளிரவு என்றும் பாராது மாநகராட்சி மேயர் ஆய்வு மேற்கொண்டு வருவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories: