இந்திய - சீன எல்லையில் சாலை பணியில் ஈடுபட்ட 19 தொழிலாளர்கள் ஆற்றில் மூழ்கி பலி?: விடுப்பு அளிக்காததால் நடந்து சென்ற போது சோகம்

இட்டாநகர்: இந்திய - சீன எல்லையில் சாலை பணியில் ஈடுபட்ட 19 தொழிலாளர்கள் ஆற்றில் மூழ்கி பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அருணாச்சல பிரதேச மாநிலம் குருங் குமே மாவட்டத்தில் உள்ள இந்திய - சீன எல்லைக்கு அருகே தொழிலாளர்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களில் சிலர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவரின் உடல் குமி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. அப்போதிருந்து, குமே ஆற்றில் மூழ்கி அனைத்து தொழிலாளர்களும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அசாமிற்கு செல்ல விடுப்பு அளிக்குமாறு ஒப்பந்ததாரரிடம் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், ஒப்பந்தக்காரர் அவர்களுக்கு விடுப்பு அளிக்க மறுத்துவிட்டார். அதனால், அவர்கள் அனைவரும் கட்டுமான பணிகள் நடக்கும் இடத்தில் இருந்து அசாமிற்கு  நடந்தே புறப்பட்டு சென்றனர். குருங் குமே மாவட்டத்தின் அடர்ந்த காடுகளின் வழியாக சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் எத்தனை பேர் சென்றனர் என்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றனர். குமே ஆற்றில் ஒரு தொழிலாளரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதால், மற்றவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. முதற்கட்ட விசாரணையில் தங்களது சொந்த ஊருக்கு சென்ற தொழிலாளர்கள் 19 பேர் என்று கூறப்படுகிறது. ஒரு வாரமாக அவர்கள் குறித்த விபரங்கள் இல்லாததால், அனைத்து தொழிலாளர்களும் ஆற்றில் மூழ்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

Related Stories: