போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர் மீது போலீசில் புகார்: திருவள்ளூர் அருகே பரபரப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கடம்பத்தூரில் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.திருவள்ளூர் கல்வி மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மடத்துக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இடைநிலை ஆசிரியராக இருப்பவர் ரவிச்சந்திரன் (58). இவர் பட்டய தேர்வு மூலம் தேர்ச்சி பெற்று 29.2.2008-ல் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இதில் கடந்த 8 ஆண்டுகளாக மடத்துக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் ஆசிரியர்களின் பணி வரன்முறை மற்றும் தேர்வு நிலை குறித்து சான்றிதழ்களை சரிபார்க்கும் பணிகளை தமிழ்நாடு அரசு தேர்வு இயக்கக அதிகாரிகள் ஆய்வு செய்வதுண்டு. அதன்படி நடத்தப்பட்ட ஆய்வில் ஆசிரியர் ரவிச்சந்திரனின் சான்றிதழ்களை சரிபார்க்கப்பட்டது.

இவரது பட்டய படிப்பிற்கான மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்களை மாற்றம் செய்து போலியான சான்றிதழை சமர்ப்பித்து அரசை ஏமாற்றி சுய தேவைக்காக பணியில் சேர்ந்துள்ளது தெரியவந்தது.இதனையடுத்து தமிழக அரசு தேர்வு இயக்கக அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமனுக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர், திருவள்ளூர் மாவட்ட கல்வி அதிகாரி எல்லப்பன், கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: