கோவில்பட்டி, ஆறுமுகநேரியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

கோவில்பட்டி : கோவில்பட்டி, ஆறுமுகநேரியில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோவில்பட்டியில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக எஸ்பி பாலாஜி சரவணனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லிதேவ்ஆனந்த். எஸ்ஐ அரிக்கண்ணன், ஏட்டுகள் ஆனந்த்அமுல்ராஜ், பாண்டியராஜன், சரவணன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் கோவில்பட்டி அன்னை தெரசா நகரில் உள்ள ஒரு வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து சுமார் 2.5 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், 2 அரிவாள், ஒரு வாள் ஆகியவற்றையும் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக அந்த வீட்டில் இருந்த மேலபாண்டவர்மங்கலம் அக்ரஹார தெருவைச் சேர்ந்த பூலோகபாண்டியன் மகன் பாலகிருஷ்ணன் (22), அன்னை தெரசா நகர் ரத்தினவேல் மகன் ரஞ்சித்குமார் (25), போஸ் நகர் 4வது தெரு ஆறுமுகபாண்டி மகன் சங்கிலிபாண்டி (21) ஆகியோரை கைது செய்தனர்.

இதேபோல் ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் எஸ்ஐ ரவிக்குமார் மற்றும் தனிப்படை போலீசார் நேற்று காயல்பட்டினம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மங்களவிநாயகர் கோயில் தெரு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர். இவர், இதே பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து மகன் தம்பிதுரை(27) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிந்து தம்பிதுரையை கைது செய்தனர். மேலும் 500 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: