4 பேர் பாத்ரூமில் வழுக்கி விழுந்தனர்: சின்னசேலம் கலவர வழக்கில் சிறுவர்கள் உட்பட 278 பேர் கைது

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தனியார் பள்ளி கலவர வழக்கில் 20 சிறுவர்கள் உள்பட 278 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 4 பேர் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் கை, கால் முறிந்து மாவு கட்டு போடப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் கலவரம் ஏற்பட்டு பள்ளி, பேருந்துகள், வகுப்பறைகள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டது. கலவரக்காரர்கள் மீது சின்னசேலம் போலீசார் 15 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அச்சுறுத்தும் விதமாக  ஆயுதங்களுடன் கூடி கலவரத்தை ஏற்படுத்துதல், சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 15 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கலவரத்தில் ஈடுபட்டதாக  128 பேர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதில் 20 பேர் சிறுவர்கள் ஆவர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 108 பேர் கள்ளக்குறிச்சி 2வது நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அனைவரையும் ஆகஸ்ட் 1 ம்தேதி வரை சிறையில் அடைக்க நடுவர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) முகமதுஅலி உத்தரவிட்டார்.  கைது செய்யப்பட்ட 108 பேரும் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவர்கள் 20 பேர் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளி சிறையில் அடைக்கப்பட்டனர். இரண்டாம் கட்டமாக 2 சிறுவர்கள் உள்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 278 நபர்களுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கொரோனா பரிசோதனையும் மருத்துவ குழுவினர்களை கொண்டு சோதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களின் 4 பேர் காவல்நிலையம் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் மூன்று நபர்களுக்கு கையில் மாவு கட்டுப்போடப்பட்டுள்ளது.  ஒருவருக்கு காலில் கட்டுப்போடப்பட்டுள்ளது. தொடர்ந்து வீடியோ, புகைப்படங்களை ஆய்வு செய்து வரும் போலீசார் கலவர வழக்கில் இன்னும் பலர் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது.

Related Stories: