போராட்டம் நடத்தியவர்களுக்கு நீதிபதி கடும் கண்டனம் கள்ளக்குறிச்சி மாணவி உடல் மறுபிரேத பரிசோதனை:சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய  சென்னை உயர் நீதிமன்றம், உத்தரவிட்டது.   கள்ளக்குறிச்சி  மாவட்டம், சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த கடலூரைச்  சேர்ந்த ஸ்ரீமதி என்ற 12ம் வகுப்பு மாணவி கடந்த 13ம் தேதி விடுதியின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் போராட்டம் கலவரமாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில்  மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி மாணவியின்  தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த  மனுவில், மாணவியின் உடலை தாங்கள் கூறும் மருத்துவரை கொண்டு மறு  உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட வேண்டும் எனக்கோரியிருந்தார்.  இந்த  வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல்கள் சங்கரசுப்பு, ரமேஷ் ஆகியோர் ஆஜராகி , மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரினர்.  அதற்கு நீதிபதி,  மறுபிரேத பரிசோதனை செய்ய கோரி இங்கு வழக்கு தொடர்ந்து விட்டு, சம்பவ இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன். இந்த போராட்டத்தை நடத்த அனுமதித்தது யார். சட்டத்தை மக்கள் கையில் எடுத்துக் கொண்டால், நீதிமன்றங்கள் எதற்காக உள்ளது. இந்த  வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டு பிடித்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, அமைதியான முறையில் போராட்டம் நடத்துவார்கள் என்கிற நிலையைத் தாண்டி அது கலவரமாக மாறி இருப்பது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவத்தை அரசு பார்த்துக் கொண்டிருக்காது. இரும்புக்கரம் கொண்டு அடக்கும்.  மீண்டும் போஸ்ட்மார்ட்டம் செய்வதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை.  நீதிமன்றம் யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாம் அதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஏற்கனவே, மாணவியின் மரணம் குறித்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு டி.ஜி.பி. மாற்றியுள்ளார் என்றார்.அப்போது நீதிபதி, இந்த போராட்டத்தில் கருப்புச் சட்டை அணிந்த ஒரு குழுவினர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் யார். இந்த வன்முறை ஒன்றும் திடீரென வெடித்தது அல்ல. திட்டமிட்டு, ஒரு கும்பல் நடத்திய ஒருங்கிணைந்த குற்றச் செயல்.  டிராக்டரை கொண்டு வந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

இதை எல்லாம் அனுமதிக்க முடியாது. இந்த வன்முறை சம்பவத்துக்கு பொதுமக்களையும் ஒன்று திரட்டிய வாட்ஸ்அப் குரூப் அட்மின் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, மீடியா டிரையல் நடத்திய யுடியூப் சேனல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறினார். பின்னர் நீதிபதி, சம்பவம் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தடய அறிவியல் துறை ஓய்வு பெற்ற இயக்குனர் சாந்தகுமாரி தலைமையில் விழுப்புரம் டாக்டர் கீதாஞ்சலி , திருச்சி டாக்டர் ஜெயந்தி, சேலம் டாக்டர் கோகுலநாதன் 3 டாக்டர்களை கொண்ட குழுவை அமைக்கிறேன். இந்த குழு மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதில், மனுதாரர் தரப்பில் அவரது வக்கீல் கேசவன் இடம் பெறலாம்.

எதிர்காலத்தில் கல்வி நிறுவனத்தில் நடைபெறும் தற்கொலை சம்பவங்களை சி.பி.சி.ஐ.டி. போலீஸ்தான் விசாரிக்க வேண்டும். இந்த வன்முறை சம்பவத்தில் அரசியல் கட்சியினராக இருந்தாலும் சரி, வேறு ஏதாவது குழுவாக இருந்தாலும், போலீசார் நேர்மையுடன், கடுமையுடன் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த மாணவி மரணம் குறித்து ஊடகங்களில் விவாதம் ஏதுவும் நடத்தக்கூடாது. பிரேத பரிசோதனை அறிக்கையை உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 29ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Related Stories: