உலக நன்மை வேண்டி திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயிலில் 10 ஆயிரம் தேங்காய் உடைத்து வழிபாடு

குத்தாலம்: உலக நன்மை வேண்டி திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவிலில் 10 ஆயிரம் தேங்காய்களை உடைத்து வழிபாடு நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான கோமுக்தீஸ்வரர் கோயில் உள்ளது. திருஞானசம்பந்தர் தனது தந்தையின் சிவ வேள்விக்காக பதிகம் பாடி ஆயிரம் பொன் பெற்ற தலமாகவும், சுவாமி முசுகுந்த சக்கரவர்த்திக்கு குழந்தை பேறு அளித்த தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோயிலில் சுவாமி, அம்பாளை வழிபட்டால் திருமண தடைகள் நீங்கி குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் நேற்று உலகில் கொரோனா நோய் தொற்று முற்றிலுமாக நீங்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் வழிபாடு நடந்தது. 10,000 தேங்காய்களை மினி வேனில் ஏற்றி கொண்டு வந்து கோயில் ராஜகோபுரத்தில் இருந்து சுவாமி சன்னதி வரை சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். இதைதொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: